ஹெஸ்புல்லா போராளிகளின் பேஜர்கள் வெடித்து சிதறியதில் 9 பேர் பலி – 3000 பேர் காயம் : இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

Lebanon Hezbollah pager explosions: US denies any involvement in Lebanon  pager blasts, Hezbollah blames Israel - India Today

லெபனான்: ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் (pager) திடீரென வெடித்துச்சிதறியதில்   குழந்தையொன்று உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3000 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 200 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணை இராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.  இந்த அமைப்புக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

கடந்த ஜூலை 30-ம் திகதி இஸ்ரேல் இராணுவம் லெபனானில் நடத்திய ஆளில்லா விமானத்  தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் புவாட் ஷூகர் கொல்லப்பட்டார்.  இதன்பிறகு இருதரப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஹிஸ்புல்லா  போராளிகள், செல்போன்களை பயன்படுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக பழங்கால பேஜரை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஹிஸ்புல்லா போராளிகள்  பயன்படுத்தும் பேஜர்கள்(pager) நேற்று ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளன.

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேஜர்கள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன.

இதுகுறித்து அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “ஹிஸ்புல்லாக்கள்   பயன்படுத்தும் பேஜரில் லித்தியம் பேட்டரி உள்ளது. இவை அதிக சூடானால் வெடித்துச் சிதறும். இஸ்ரேல் உளவுத் துறை, சைபர் தாக்குதல்மூலம் பேட்டரிகளை அதிக சூடாக்கி வெடித்துச் சிதறச் செய்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த பேஜர்கள் வெடிப்புக்கு இஸ்ரேல் முழுப்பொறுப்பு என ஹிஸ்புல்லாக்கள்  குற்றம் சாட்ட்டியுள்ளன. ஆனால் இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் எந்தக்கருத்தையும் இன்னும் வெளியிடவில்லை.