இலங்கையில் தற்போது நிலவி வரும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் 70 சென்றிமீட்டர் வீதம் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும், ஊடக பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ரந்தெனிகல நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவு 2.5 மீட்டர் வரையும், மற்றைய வான் கதவு ஒரு மீட்டர் வரையும் திறக்கப்பட்டுள்ளன.
ரன்தம்பே நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு வான் கதவு 2 மீட்டர் வரையும், மற்றைய வான் கதவு 2.5 மீட்டர் வரையும் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றமையினால், தாழ் நிலப் பரப்பிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் படிப்படியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், மழையுடனான வானிலை தொடரும் பட்சத்தில் ஏனைய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கக்கூடிய நிலைமை ஏற்படும் என கூறப்படுகின்றது.



