ஐநா அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

ஜப்பானின் நிதியுதவியின் கீழ் ஐநா அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட  குளிரூட்டப்பட்ட அறைகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு | Virakesari.lk

சிறுவர்களின் தொடர்ச்சியான சுகாதார மேம்பாட்டினை இலக்காகக்கொண்டு ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட walk-in cold rooms எனும் குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் போசாக்கு வழங்கல்கள் சுகாதார அமைச்சிற்கு இன்று (ஜன 24) கையளிக்கப்பட்டன.

இன்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு கையளிக்கப்பட்ட உபகரணத்தொகுதிகளில் 13 குளிரூட்டப்பட்ட அறைகள், அதாவது அதிவெப்பநிலை உணர்திறனுடைய தடுப்பூசிகளை பாதுகாப்பாக அதிகளவில் வைத்திருக்க முடியுமான பெரிய குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கின்றன. இவை கொழும்பு மாவட்டத்திலும், பிராந்திய மருத்துவ வழங்கல் கிளைகளான கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, அநுராதபுரம், இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சிற்கு ஏற்கனவே 3 மில்லின் அமெரிக்க டொலர் பெறுமதியான எடுத்துச் செல்லத்தக்க தடுப்பூசிக் கொள்கலன்கள் மற்றும் வெப்பநிலைக் கண்காணிப்பு மானிகள் உள்ளடங்கலாக பல்வேறு குளிர்ச் சங்கிலி உபகரணத் தொகுதிகள் வழங்கப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியே அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ள இவ் உபகரணங்களாகும். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது மாத்திரமன்றி தடுப்பூசிகளை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் களஞ்சியப்படுத்துவதற்கும் தேவைப்படும் எல்லா இடங்களிலும் கிடைப்பதற்கும் வழிசெய்யும்.

அத்துடன், இவற்றுக்கு மேலதிகமாக சிறுவர்களின் பராமரிப்புக்கு உடனடியாகத் தேவைப்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களைத் கொள்வனவு செய்வதற்கும், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் ஏனைய நோய்களைக் கண்டறிவதற்கு பரிசோதனைகளை நடாத்தி தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்குமென 500,000 அமெரிக்க டொலர் நிதிப்பங்களிப்பு வழங்கப்பட்டதோடு அதன் ஒரு பகுதியேஇப்போசாக்கு வழங்கல்களாகும்.

இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மை தங்கிய Mizukoshi Hideaki அவர்கள், “முழு நாட்டிலும் தேவையுடனுள்ள மக்கள் அனைவருக்கும் நோய்த் தடுப்புச் சேவைகள் சமமாக கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதற்கான “Last One Mile Support” எனும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக Walk-in Cold Rooms எனும் குளிரூட்டப்பட்ட அறைகளை வழங்குவதற்கு கிடைத்த வாய்ப்புக்காக நாம் பெருமைப்படுகிறோம். அத்துடன், இவ் உபகரணத்தொகுதி கொவிட்-19 உள்ளடங்கலாக மகப்பேற்று மற்றும் சிறுவர் சுகாதாரத் தடுப்பூசிகளின் களஞ்சியப்படுத்தல் மற்றும் எடுத்துச்செல்லல் திறனை மேம்படுத்துமென்றும், நாடு தற்போது எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடி நிலையிலும் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு முறைமையைப் பலப்படுத்துவதற்கு உதவுமெனவும் நாம் நம்புகிறோம். மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக துரித விலையேற்றம் மற்றும் இறக்குமதிப் பொருட்களின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் நிலையான ஊட்டச்சத்து கிடைக்காத அதிகமான சிறுவர்களுக்கு இப் போசாக்குப் பொதி சிறந்த தீர்வாக இருப்பதுடன், போசாக்கு வழங்கல்களும் தரமான ஆலோசனைகூறலும் மிகவும் மோசமான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு ஓரளவு நிவாரணமாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

“நோய்த்தடுப்பு முறைமையில் முதலீடு செய்வதனூடாக, குறிப்பாக குழந்தைகளுக்குக் கிடைக்கும் பயன்கள் தெளிவானவை. கொவிட்-19 தொற்று நோய் போன்ற தடுப்பூசியினால் தடுக்கக்கூடிய அவசரகால நிலைமைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய திறன் உள்ளடங்கலாக வழமையான நோய்த்தடுப்புச் சேவைகளில் இலங்கையின் பாரிய முயற்சிகளை மேலும் முன்னேற்றுவதற்கு இவ்வுபகரணத்தொகுதி உதவும்” என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டியன் ஸ்கூக் அவர்கள் தெரிவித்தார். மேலும், “ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது தவிர்ந்துகொள்ள முடியுமான சிகிச்சை வழங்கக்கூடிய ஒரு நிலைமையாகும். எனவே, இன்று கையளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சிறுவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான எமது கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும்” என்று குறிப்பிட்டார். சிறுவர்களின் குறுகியகால, நீண்டகால தேவைகளுக்கு தீர்வுகாண்பதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பாரிய பங்களிப்புக்களை வழங்கியுள்ளது.