இலங்கை- பாடசாலைகளில் அதிகரிக்கும் கோவிட் 19

இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன்

பாடசாலைகளில் அதிகரிக்கும் கோவிட் 19: தற்போது பாடசாலைகளில் அதிகளவான கோவிட் -19 தோற்றலர்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மூடப்பட்ட இடங்கள் மற்றும் சிறிய வகுப்பறைகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார். புத்தளத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நிறைய மாணவர்கள் மற்றும் போதிய இடவசதி இல்லாத வகுப்பறைகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையளாம் காணப்படுகின்றனர். இது கொத்தணிகளுக்கு வழிவகுக்கும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அவதானமாக இருந்தால் இவ்வாறான நிலைமையை ஓரளவு தவிர்க்க முடியும்.

திருமணங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் இருந்தும் தொற்றுகள் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொறுப்புடன் செயற்படத் தவறினால் அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பேரழிவு ஏற்படும். அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகுவதை சுகாதார அமைப்பால் தாங்க முடியாத சூழ்நிலைக்கு இது நாட்டைத் தள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பல பகுதிகளில் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களில் சிறிதளவு அதிகரிப்பு காணப்பட்டாலும், பதிவாகாத நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்துபவர்கள் மிகவும் முக்கியமான அறிகுறிகளைக் காட்டுவதாக அவர் வலியுறுத்தினார். ஒமிக்ரோன் பிறழ்வானது ஆபத்தான அறிகுறிகளுக்கு வழிவகுக்காது என்று கூறப்பட்டாலும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Tamil News