வேறு நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாது சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டு வராது: சாள்ஸ் நிர்மலநாதன்

சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய

வேறு நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாது சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டு வராது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு பிறகு வருகின்ற ஆட்சியாளர்கள் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்ட வர வேண்டும் என்று முயற்சி செய்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான நிபுணர் குழு ஒன்றை நியமித்த போதும் அரசியலமைப்பு மாற்றம் ஒன்று வரும் என்று நம்பிக்கையில்லை. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்சைப் பொறுத்தவரை அரசியல் யாப்பு தொடர்பான நீண்டகால அனுபவம் உள்ள ஒருவர்.

ஆனால் சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் யாப்பை இலங்கை அரசாங்கம் கொண்டு வராது. அதற்கு வேறு நாடுகள் மத்தியஸ்தம் வகித்து இன ரீதியாக தமிழர்கள் பாதிகட்கப்படும் விடயங்களை வலியுறுத்துவதன் மூலமே தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஒன்று வருமே ஒழிய இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியில் தமிழர்கள் இன ரீதியாக, கௌரவமாக வாழக்கூடிய வகையில் அரசியலமைப்பில் எந்தவொரு மாற்றமும் வராது என்பது என்னுடைய கருத்து எனத் தெரிவித்தார்.

Tamil News