நாட்டை இராணுவ மயமாக்க அரசு முயற்சி! இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

இராணுவ மயமாக்க அரசு முயற்சி
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் சூழ்நிலையில், நாட்டை இராணுவ மயமாக்க அரசு முயற்சி செய்து வருகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் 12ஆவது சிரார்த்த தினம், முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் அனைத்துத் திணைக்களங்களினதும் அரச நிறுவனங்களினதும் செயலாளர் பதவிகள், அரச நிர்வாக சேவை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்குப் பதிலாக ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இராணுவ அதிகாரிகள் நன்றாகப் போர் செய்யும் திறமைப் பெற்றவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும், அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் போன்று பொருளாதார ரீதியாக தீர்மானம் எடுக்கக்கூடிய அனுபவமும் இயலுமையும் அவர்களிடம் இல்லை.

இதன் காரணமாக இன்று நாடு அதாள பாதாளத்தில் வீழ்ந்து மீண்டெழ முடியாத நிலையில் உள்ளது. அனைத்துத்துறைகளும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையால் இராணுவமயமாக்கலிலிருந்து மீண்டு ஜனநாயகத்தை நிலைநாட்ட நாட்டு மக்கள் ஒன்றுதிரண்டு வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்.

மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க நாணயத்தாள்களை அச்சடித்து வெளியிடுவதைத் தொழிலாக செய்து வருகின்றார். இதனால் பணவீக்கம் அதிகரித்து டொலருக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலை தொடர்வதால், நாட்டில் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு, பால்மா, எரிவாயு, கோதுமை என அனைத்துப் பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஊழல், மோசடி தலைவிரித்தாடுகின்றது” என்றார்.

Tamil News