அமெரிக்காவில் அரசு முடக்கத்திற்கு முடிவு : மசோதாவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

அமெரிக்காவில் 43 நாட்களாக நிலவிவந்த பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க வரலாற்றில் இவ்வாறு அதிக நாட்கள் பணிகள் முடங்குவது இதுவே முதன்முறை.

டிரம்ப் இந்த மசோதாவில் கையெழுத்திட்ட பின், பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இதன்மூலம், இந்த பணி முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

புதன்கிழமை அன்று இந்த மசோதா பிரதிநிதிகள் அவையில் 222-209 என்ற வாக்குகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இரு தினங்களுக்கு முன்பு, சிறிய வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதா செனட் அவையில் நிறைவேற்றப்பட்டது.

ஓவல் அலுவலகத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “தற்போது வழக்கமான பணிகளை அரசு தொடரும்,” என்றார். மேலும், 43 நாட்கள் பணி முடக்கத்தால் மக்கள் “மிக தீவிரமாக பாதிக்கப்பட்டதாக” ட்ரம்ப் கூறினார்.

இந்த பணி முடக்கத்தால் கடந்த அக்டோபர் முதல் பல்வேறு அரசாங்க சேவைகள் முடங்கின. சுமார் 14 லட்சம் கூட்டாட்சி ஊழியர்கள் ஊதியமின்றி வேலை பார்த்தனர். மேலும், உணவு உதவித் திட்டங்களுக்கும் நாடு முழுவதும் வான் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.

வரும் நாட்களில் அரசாங்க சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வான் போக்குவரத்தும் சீராக சரிசெய்யப்படும்.

முன்னதாக, கூட்டாட்சி வான் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஊழியர்கள் பற்றாக்குறையால், வான் போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது.