இலங்கையில் நடைமுறையிலுள்ள துறைமுக மற்றும் வானூர்தி நிலைய மேம்பாட்டு வரி மற்றும் CESS போன்ற மேலதிக வரிகளை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் கட்டம் கட்டமாக நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் ஏப்ரல் மாதத்திற்கான தெற்காசிய பொருளாதார இற்றைப்படுத்தல் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய மொத்த இறக்குமதி வரிகளின் சராசரி 19 சதவீதமாகக் காணப்படுகிறது.இதில் சட்டரீதியான தீர்வைகள் பாதியளவுக்கும் குறைவாகவே உள்ளன. எஞ்சிய 11 சதவீதம் மேலதிக வரிகளாகவே வசூலிக்கப்படுகின்றன.
புதிய தேசிய வரிக் கொள்கையின்படி, 2029ஆம் ஆண்டளவில் PAL மற்றும் CESS வரிகளை முழுமையாக நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இறக்குமதி வரிகளில் சராசரியாக 9 சதவீதக் குறைப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி நீக்கமானது இலங்கையின் சராசரி நுகர்வு மட்டத்தை 3.1 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் என்று உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, இந்த மாற்றத்தினால் நாட்டின் வறிய குடும்பங்களே அதிகளவிலான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் மேற்கொண்டுள்ள தாராள வர்த்தக உடன்படிக்கைகள் குறித்தும் உலக வங்கி கருத்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பு ஆறில் ஒரு பங்கிலிருந்து மூன்றில் ஒரு பங்காக உயரும்.
குறிப்பாக ஆடை மற்றும் தோல் உற்பத்தித் துறைகளில் 17 முதல் 19 சதவீத வரி குறைப்புகளை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. இலங்கையின் இந்த வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியாவின் புதிய வர்த்தக அணுகுமுறைகள் தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.



