பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதி – ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் இலங்கை எடுத்துரைப்பு

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின்கீழ் இயங்கும் ஆட்சியியல் நிர்வாகம், சட்டவாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பணிக்குழுவின் 8 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (5) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது ஊழலை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள், தொழிலாளர் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகளை உறுதிப்படுத்தல், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல், சிவில் சமூக அமைப்புக்களின் இயங்குகைக்கு அவசியமான இடைவெளியை வழங்கல், தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்தல், பாலினம் மற்றும் பாலியல் நோக்கை அடிப்படையாகக்கொண்ட பாகுபாடுகளை முடிவுக்குக்கொண்டுவரல் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு கடந்த ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தல்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, அமைதியான முறையில் நடாத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கையைப் பாராட்டினர். அதற்குப் பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், ஜனாதிபதித்தேர்தலின்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்புப்பணிகள் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்படுத்தினர்.

அதேபோன்று பொருளாதார ஸ்திரத்தன்மை, மீட்சியை இலக்காகக்கொண்ட தொடர் முயற்சிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட முற்போக்கான முக்கிய நகர்வுகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைப் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதிலிருந்து ஜனநாயக செயன்முறை, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

அதேவேளை சட்டம், ஒழுங்கை வலுப்படுத்துவதற்கான நிர்வாகம் மற்றும் நீதித்துறைசார் செயன்முறைகளின் முக்கியத்துவத்தினையும், ஜனநாயக சமூகங்களுக்குள் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதும், ஆலோசனை அடிப்படையிலான சட்ட செயன்முறைகளைப் பேணுவதிலும் சிவில் சமூக அமைப்புக்கள் கொண்டிருக்கும் பிரதான வகிபாகத்தினையும் இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், சர்வதேச மனித உரிமைகள்சார் நடைமுறைகளை திறம்பட அமுல்படுத்துவதற்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக இதன்போது ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

அதனையடுத்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்துத் தெளிவுபடுத்தினர். அதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஊடாக ஐரோப்பிய ஒன்றிய சந்தையைத் தொடர்ந்து அணுகுவதை உறுதிசெய்வதற்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நியமங்களுக்கு ஏற்பட்ட பொருத்தமான சட்டத்தைக் கொண்டுவரவேண்டியது அவசியம் என வலியுறுத்தினர்.

மேலும் இனவாதத்தை முடிவுக்குக்கொண்டுவந்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய பங்கேற்பு செயன்முறை மூலம் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிமொழியையும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வரவேற்றனர்.