வடக்கு, கிழக்கு மக்கள்மீது மாத்திரம் அரசாங்கம் தமது புறக்கணிப்பைக் காட்டவில்லை. அங்குள்ள பாலங்களையும் அரசு புறக்கணிக்கிறது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – வட்டுவாகல், நந்திக்கடல் பாலமானது நிர்மாணிக்கப்பட்டு 72ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில் அந்தப்பாலம் அடிக்கடி உடைவதால் பயணிகள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
நீண்டகாலமாக பலத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் வட்டுவாகல், நந்திக்கடல் பாலத்தினூடாக பயணிகள் பயணித்துவரும் நிலையில், புதிய பாலம் அமைப்பதற்கான எந்த செயற்பாடுகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
எனவே இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“முல்லைத்தீவு – வட்டுவாகலில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் கட்டுமானப்பணியினை மேற்கொள்ளாது அரசாங்கம் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச்செய்துவருகின்றது.
குறிப்பாக வட்டுவாகல் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் பாலமானது, 1950காலப்பகுதியில் அமைக்கப்பட்டதென அப்பகுதியைச்சேர்ந்த மூத்தோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் குறித்த பாலம் அமைக்கப்பட்டு ஏறத்தாள 72ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், அந்தப் பாலத்தில் அடிக்கடி உடைவுகள் ஏற்படுகின்றன. அதனால் போக்குவரத்துக்கள் தடைப்படுவதுடன், பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.
அத்தோடு இவ்வாறு அந்தப் பாலம் அடிக்கடி உடைகின்ற சந்தர்ப்பங்களில், அந்த உடைவுகளை சீர்செய்யும் செயற்பாடுகள் மாத்திரம் இடம்பெறுகின்றதே தவிர, புதிய பாலம் ஒன்றினை அமைத்து போக்குவரத்து இடர்பாட்டிற்கு நிரந்தரமான தீர்வினை வழங்க அரசாங்கம் முன்வரவில்லை.
அதேவேளை புதியபாலம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என நாம் கடந்தகாலத்தில் மாகாணசபையிலும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும், பிரதேசஅபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருக்கின்றோம்.
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் வீதியில் பிரதான ஒரு பாலமாக வட்டுவாகல் நந்திக்கடல் பாலம் அமைந்திருக்கின்றது.
இவ்வாறாக மிகவும் பழமையாகவும், உடைவடைந்தநிலையிலும் தென்னிலங்கையில் ஓர் பாலம் இருந்தாருந்தால், உடனடியாக இந்த அரசாங்கம் புதியபாலம் ஒன்றினை அமைத்திருப்பார்கள்.
வடபகுதியில் இவ்வாறான நிலை இருக்கின்றது என்ற ஒரே காரணத்தினாலேயே இன்னும் வட்டுவாகலில் புதியபாலம் அமைக்கப்படவில்லை.
இவ்வாறாக வடக்கு மக்கள், கிழக்கு மக்கள் என்று மாத்திரம் அரசாங்கம் தமது புறக்கணிப்பைக்காட்டவில்லை. வடக்கிலுள்ள பாலங்ளையும் அரசாங்கம் புறக்கணிக்கின்றது.
நிச்சயமாக ஒரு முறையான அரசாங்கமாக இருந்தால் இந்த வட்டுவாகல் நந்திக்கடல் பாலம் எப்போதோ புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.
எனவே இனியாவது வட்டுவாகல் நந்திக்கடல் பாலத்தினை அமைக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்“ என்றார்.