நாட்டு மக்களின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொள்வதாக இல்லை-வடிவேல் சுரேஷ் எம்.பி

நாட்டு மக்களின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொள்வதாக இல்லை.பசி பட்டினியுடன் மக்கள் அல்லல்படுகையில் ஆட்சியாளர்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்துகின்றனர் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் சமகால நிலைமைகளால் பெருந்தோட்ட மக்கள் இரட்டிப்பு பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் நிலையில் இவற்றுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 இது தொடர்பில் அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாடு அதளபாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஆட்சிமாற்றம் எப்போதும் ஏற்படலாம் என்றதொரு நிலை இப்போது மேலோங்கி வருகின்றது.நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் நிலையில் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.நாட்டு மக்களின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து செயற்படுவதாக இல்லை.அவர்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஒரு நிலையே காணப்படுகின்றது.இது பல்வேறு பாதக விளைவுகளுக்கும் உந்துசக்தியாக அமையும். ஜனாதிபதியையும்  அரசாங்கத்தையும் வீட்டுக்கனுப்பும் வரை இந்த போராட்டம் தொடரவேண்டும்.மக்கள் ஒரு போதும் ஓய்ந்து விடக் கூடாது.

நாட்டின் அரசியலில் ஸ்திரமற்ற ஒரு நிலைமை இப்போது காணப்படுகின்றது. இந்நிலையில் சர்வதேசத்திற்கு மத்தியில் நாடு நம்பிக்கை இழந்துள்ளது. இதனால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புக்கள் இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் பின்னடித்து வருகின்றன.உதவிகள் கிடைக்காதவிடத்து நாட்டு மக்கள் மென்மேலும் வறுமை நிலையை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதே உண்மையாகும்.

ஆட்சியாளர்களின் பிற்போக்கான செயற்பாடுகள் காரணமாக நாடு இன்று அதள பாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.வறுமையின் உச்சத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மலையக மக்களின் வறுமையானது இரட்டிப்பாகியுள்ளது. சட்டியில் இருந்த இவர்கள் இப்போது அடுப்பிற்கு தூக்கியெறியப்பட்டிருக்கின்றார்கள். கோதுமை மா நிவாரணம் வழங்குவதாகக் கூறி அரசாங்கம் பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி இருந்தது.இதனால் தொழிலாளர்கள் சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் தரமற்ற கோதுமை மா விநியோகத்தினால் மக்களின் ஆரோக்கிய நிலைமைகளும் அபாயத்தை எதிர்நோக்கி இருந்தது.தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்ச்சியாக புறந்தள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தி நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இனியும் தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டது.எனவே அரசாங்கத்தை வீட்டுக்கனுப்புவதோடு தொழிலாளர்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வாழ்வியல் மேம்பாடு கருதி தேயிலை விளை நிலங்களை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றார்.

Tamil News