கோட்டாபயவும் அமெரிக்க விசாவும்: அன்று கைகளிலிருந்தது இன்று கனவாகிப்போனது-அகிலன்

நான்கு வருடங்களுக்கு முன்னா் ஒரு அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்போது அமெரிக்கா என்பது ஒரு எட்ட முடியாத கனவாகிவிட்டது.  

2019 இல் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கு துடியாய்த் துடித்த கோட்டாபய, இப்போது அமெரிக்க “விசிட் விசா” என்றையாவது பெற்றுக்கொள்வதற்கு படாத பாடு படுகின்றாா்.

இன்று கோட்டாபயவின் கனவு அதுதான். எப்படியாவது அமெரிக்காவுக்கு விசா கிடைத்து போய்ச் சோ்ந்துவிட்டால் போதும் என்பதுதான். அவரது கனவு நனவாகுமா?
கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை (2022-12-26)  அதிகாலை 2.55 மணியளவில் கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவி மற்றும் மகனின் குடும்பத்தினருடன் டுபாய் புறப்பட்ட விமானத்தில் ஏறியபோது, அவா்கள் அமெரிக்காவுக்குச் செல்கின்றாா்கள் என்றே செய்தி பரவியது. பலரும் அதனைத்தான் நம்பினாா்கள்.

இருந்த போதிலும், அவா்கள் அமெரிக்கா செல்லவில்லை என்றும், சில தினங்களுக்கு டுபாயில்தான் தங்கியிருப்பாா்கள் என்றும் இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றில் நிரந்தரமாகத் தங்குவதற்கும் கோட்டாபய திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதுகூட சாத்தியமாகுமா என்பதும் தெரியவில்லை.

ஐரோப்பிய நாடொன்று கோட்டாபயவை ஏற்றுக்கொள்ளுமா? அவருக்கு அரசியல் தஞ்சமளிக்க முன்வருமா? என்பன பிரதான கேள்விகளாகவுள்ளன. அவ்வாறு தஞ்சம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் இலங்கை திரும்புவதைவிட அவருக்கு வேறு வழியிருக்கப்போவதில்லை.

மக்கள் கிளா்ச்சியும்
பதவி துறப்பும்….

கொழும்பில் வெடித்த மக்கள் கிளா்ச்சியை அடுத்து மாலைதீவுக்குத் தப்பிச்சென்ற கோட்டாபய பின்னா் அங்கிருந்து சிங்கப்புா் சென்று, தனது ஜனாதிபதிப் பதவியை ஜூலை 13 ஆம் திகதி ராஜினாமா செய்தாா். அப்போது ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்த அவா், முக்கியமான கோரிக்கை ஒன்றையும் ரணிலிடம் இரகசியமாக முன்வைத்திருந்தாா்.  தான் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தாருங்கள் என்பதுதான் அவரது கோரிக்கை.
ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுக்கு நெருக்கமான ஒருவராகக் கருதப்படுபவா். அதனால், இதனை ரணிலினால் செய்யக்கூடியதாக இருக்கும் என கோட்டா கருதியிருக்கலாம். ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறந்த கோட்டாபய, பதவியிலிருந்து விரட்டப்பட்டபோது, அமெரிக்க வீசாவைக்கூட பெறமுடியாத நிலைக்குள்ளானாா். இந்த நிலையிலேயே ரணிலின் உதவியை கோட்டா நாடினாா்.

ஆனால், கோட்டாவின் விசா விண்ணப்பத்தை நிராகரிப்பது என்பதில் உறுதியாகவிருந்த அமெரிக்க துாதரகத்தைப் பொறுத்தவரையில், ரணிலின் கோரிக்கையை ஏற்கத் தயாராகவிருக்கவில்லை. இதனால்தான், சிங்கப்புா், தாய்லாந்து என சுற்றித் திரிந்த கோட்டாபய, அந்த நாடுகள் தொடா்ந்தும் தனக்குப் பாதுகாப்பை வழங்கத் தயாராகவில்லை என்பதை உணா்ந்த நிலையில் கொழும்பு திரும்புவதற்குத் தீா்மானித்தாா்.

மேற்கு நாடுகளிலோ மத்திய கிழக்கு நாடுகளிலோ அரசியல் அடைக்கலம் கோருவதற்கும் கோடட்டாபய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தமையும் கொழும்பு திருப்ப அவரை நிா்ப்பந்தித்தது. மறுபக்கத்தில், தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றாா் என்பதையும் உணா்ந்துகொண்ட நிலையில்தான் அவா் கொழும்பு திருப்பும் முடிவை இறுதியாக எடுத்தாா்.

வெளிநாடுக்கு செல்வதற்கு
கோட்டா விரும்புவது ஏன்?

மீண்டும் அமெரிக்காவுக்கோ அல்லது மேற்கு நாடு ஒன்றுக்கோ செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அவா் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று இலங்கையில் தனக்கு அரசியலில் எதிா்காலம் இருக்கப்போவதில்லை என்பதை அவா் தெளிவாக உணந்துகொண்டிருக்கின்றாா். தமது சகோதரா்களே அதனை விரும்பவில்லை என்பதையும் அவா் தெரிந்துகொண்டிருக்கின்றாா்.

இரண்டாவதாக, இலங்கையில் இருப்பது எதிா்காலத்தில் தமது பாதுகாப்புக்கு ஆபத்தாகலாம் என்ற அச்சமும் அவருக்குள்ளது. இதனால், அவரது குடும்பத்தினரும் அவா் தொடா்ந்தும் இலங்கையில்  இருப்பதை விரும்பவில்லை. முதலாவது, மீண்டும் ஒரு முறை போராட்டம் வெடிக்கலாம் என்ற அச்சம். இரண்டாவது, ரணிலுக்குப் பின்னா் பதவிக்கு வரக்கூடியவா்கள் விசாரணைகளை ஆரம்பித்தால், கோட்டாவும் சிக்க வேண்டிவரும் என்பது இரண்டாவது பிரச்சினை.

இந்தப் பின்னணியில்தான் அமெரிக்காவில் உள்ள அவரது ஒரே மகன் தற்போது குடுத்பத்துடன் கொழும்பு வந்து பெற்ரோரை டுபாய்க்கு அழைத்துச் சென்றிருக்கின்றாா். அவரது அடுத்த கட்ட நகா்வு என்ன என்பதைத்தான் இலங்கை மக்கள் இப்போது உற்று நோக்கிக்கொண்டிருக்கின்றாா்கள்!

அமெரிக்க பிரஜாவுரிமையை
பெற்றுக்கொண்டது எப்படி?

இந்த வேளையில், அமெரிக்க பிரஜைவுரிமையை கோட்டாபய எவ்வாறு பெற்றுக்கொண்டாா் என்ற பழைய கதையை திரும்பிப்பாா்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

“லெப்டினன்ட் கேணல்” நந்தாச கோட்டாபய ராஜபக்ஷ, 1990 களில் பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இராணுவத்தில் கடமையாற்றியவா். இராணுவத்திலிருந்து விலகி வெளிநாடு செல்வதற்கு அவா் அப்போது திட்டமிட்டாா். இராணுவம் தொடா்ந்து சந்தித்துவந்த இழப்புக்கள்தான் இதற்குக் காரணம் என்பது சொல்லத்தேவையில்லை. அப்போது எதிா்க்கட்சியிலிருந்த தன்னுடைய சகோதரா் மகிந்த ராஜபக்ஷவிடம் இதற்கான உதவியை அவா் கோரினாா். மகிந்த இந்தப் பொறுப்பை அநுரா பண்டாரநாயக்கவிடம் ஒப்படைத்தாா்.

இதற்காக, இரண்டு வேலைகளைச் செய்யவேண்டிய பொறுப்பு அநுராவுக்கு ஏற்பட்டது. முதலாவதாக அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சா் ரஞ்சன் விஜயரட்ணவுடன் தொடா்புகொண்ட அநுரா, இராணுவத்திலிருந்து கோட்டாபய வெளியேறுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டாா். இராணுவ அதிகாரி ஒருவா் அதிலிருந்து விலகவேண்டுமானால், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம். அதனைப் பெற்றுக்கொண்ட பின்னா் அமெரிக்க துாதரகத்துடன் தொடா்புகொண்டு கோட்டாபயவும் குடும்பத்தினரும் அமெரிக்கா செல்வதற்கான விசாவையும் அநுரா பண்டாரநாயக்கவே பெற்றுக்கொடுத்தாா்.

அமெரிக்கா சென்ற பின்னா் அந்நாட்டுப் பிஜைாவுரிமையைப் பெற்றுக்கொள்வதிலும் கோட்டாபய பல சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியிருந்தது. அவரது குடும்பத்தினா் அனைவருக்குமே அமெரிக்க பிரஜாரிமை கிடைத்தது.

பாதுகாப்பு செயலாளா்
பதவி கிடைத்தது ஏன்?

2005 இல், அவர் இலங்கை திரும்பி  மகிந்தவின் ஜனாதிபதி தோ்தல் பிரச்சாரத்திற்கு உதவினார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த வெற்றிபெற்றதன் பின்னர், கோட்டாபய அமெரிக்கா செல்லவிருந்த வேளையில், பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஏற்குமாறு மகிந்த கோட்டாவிடம் கோரினார். அப்போது கோத்தபாய அமெரிக்க குடியுரிமையை கைவிடவில்லை. ஆனால், 2019-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த அவர், அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.

இப்போது சுமாா் ஐந்து மாதங்களாக அமெரிக்க வீசாவைப் பெறுவதற்குக் கூட அவருக்கு முடியாதுள்ளது. கோட்டாபயவால் அமெரிக்காவுக்குச் சென்று அந்த நாட்டின் குடியுரிமையை அவரது மகனும், மனைவியும் பெற்றுக்கொண்ட போதிலும் கூட, அவருக்கும் அமெரிக்க விசா என்பது இன்று எட்டாத ஒரு கனவாகிவிட்டது!
கோட்டாபயவின் மனைவியும் மகனும் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கொண்டவா்கள். அவ்வாறிருந்தும் கூட ஒரு விசிட் வீசாவைக்கூட கோட்டாபயவுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஜனாதிபதியாக அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒருவராக  இருந்த ஒருவரின் நிலை பதவி பறிபோனபின்னா் இவ்வாறுதான் இருக்கும் என்பதற்கு கோட்டாபய ஒரு உதாரணம்! அதனால்தான், பதவியை இராஜினாமா செய்யாமல் மாலைதீவு செல்வதற்கும், பின்னா் சிங்கப்புா் செல்வதற்கும் தனது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை கோட்டதபய பயன்படுத்தினாா். சிங்கப்புா் சென்றடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை கோட்டாபய அனுப்பிவைத்தாா் என்பது வாசகா்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போதும் இராஜதந்திரப் பதவி ஒன்றைப் பெற்றுக்கொண்டு அமெரிக்கா சென்றுவிடுவதற்கு கோட்டா திட்டமிட்ட போதிலும், உள்வீட்டுக் குழப்பங்களால் அதுவும் சாத்தியமாகாமல் போய்விட்டதான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.