திறன்வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு நல்ல நேரம்: அவுஸ்திரேலியாவில் புதிய விசா முறை

142 Views

திறன்வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கான 2022-23ம் ஆண்டு புலம்பெயர்வு திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலிய அரசு வழங்கியுள்ள இடைக்கால ஒதுக்கீட்டின் மூலம் அவுஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் கூடுதலான திறன்வாய்ந்த வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

நிரந்தரமாக புலம்பெயர எண்ணும் வெளிநாட்டவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசு தயாராகி வரும் சூழலில்,  அவுஸ்திரேலிய மாநிலங்களுக்கான திறன்வாய்ந்தவர்களுக்கான நியமன விசாக்கள் (துணை வகுப்பு 190) மற்றும் திறன்வாய்ந்தவர்களுக்கான பிராந்திய விசாக்களுக்கான (துணை வகுப்பு 491) இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அவுஸ்திரேலியவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, மேற்கு அவுஸ்திரேலிய உள்ளிட்ட மாநிலங்களுக்கான விசா எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது திறன்வாய்ந்தவர்களுக்கான பிரிவின் கீழ் நிரந்தரமாக அவுஸ்திரேலியவில் வசிக்க வழித்தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிக விசாவாசிகளுக்கு ஒரு நற்செய்தி எனக் கூறுகிறார் மெல்பேர்னை மையமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர்வு முகவர் ரன்பீர் சிங்.

“கூடுதலாக 30 ஆயிரம் விசாக்கள் என்பதன் மூலம் திறன்வாய்ந்தவர்களுக்கான நியமன விசா ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு புலம்பெயர்வு திட்டத்தில் திட்டமிட்டதை விட இரண்டு மடங்கு அதிகமாகும்,” எனக் கூறுகிறார் ரன்பீர் சிங்.

இது தற்காலிக விசாவாசிகளுக்கு மட்டுமல்ல நியமன விசாக்கள் மூலம் அவுஸ்திரேலிய வர எண்ணும் வெளிநாட்டவர்களுக்கும் ஒரு நல்ல நேரம் என்கிறார் ரன்பீர் சிங். அவுஸ்திரேலியாவில் நிலவி வரும் தொழிலாளர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் இம்முடிவுகளை அவுஸ்திரேலிய அரசு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தொழிலாளர் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பாக பேசியுள்ள திறன்கள் மற்றும் பயிற்சிக்கான அவுஸ்திரேலிய அமைச்சர் பிரெண்டன் ஓ’கானர் “இரண்டு விஷயங்கள்: ஒன்று, திறன்வாய்ந்தவர்களுக்கான தட்டுப்பாடு உள்ள பிரிவுகளின் கீழ் அவுஸ்திரேலியாவுக்குள் புலம்பெயர்ந்தவர்களை அனுமதிப்பது. இரண்டு, தற்காலிக விசாவாசிகள் நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பது,” எனத் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply