தமிழ்தரப்பிற்கு ஆட்சியினை வழங்குங்கள்- சிங்கள மக்களை கோரும் செல்வம் எம்பி

இலங்கையின் ஆட்சியினை ஒருவருடத்திற்கு தமிழ்தரப்பிற்கு வழங்குங்கள் ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்தி காட்டுகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஐனாதிபதியாகும் தகுதி கோட்டாபயவிற்கு இல்லை என்று எமது மக்கள் வாக்குகள் மூலம் அன்றே ஆருடம் சொல்லியிருந்தார்கள். கோட்டாவும்,மகிந்தவும் ஆயுத போராட்டத்தினை மௌனிக்க செய்ததாக வெற்றிவிழா கொண்டாடினார்கள். ஆனால் சர்வதேசத்தின் உதவியுடன் தான் எமது போராட்டத்தினை மௌனிக்க செய்தார்களே தவிர இவர்களது திறமையால் மௌனிக்கவில்லை என்பதை இன்று விளங்கிக்கொள்ள முடியும்.

இன்று சிங்கள மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் எமது போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் போராட்டக்காரர்களால் வெளிப்படையாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  ஈழத்தை கொடுத்திருந்தால் அது பணத்தை தந்திருக்கும் என்று முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சொல்கிறார்.

அன்று இரத்தினபுரியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டபோது விடுதலைப்புலிகள் சிங்கள மக்களிற்கு உதவிகளை வழங்கியிருந்தனர். அந்த வரலாறை நாம் மறக்க முடியாது. எனவே அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற சிந்தனை ஓட்டத்தினை நாங்கள் இன்று செய்தாக வேண்டும்.

இந்தசந்தர்ப்பத்தில் சிங்கள மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். ஒருவருசம் தமிழ்தரப்பிற்கு ஆட்சியினை வழங்குங்கள். ஒரு வருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்தி காட்டுகின்றோம். தமிழ் சிங்கள மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கும் படியாக எமது செயற்பாடு இருக்கும். அதை நாங்கள் எமது போராட்ட காலங்களில் நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.

அத்துடன் இந்த ஜனாதிபதி முறையால் தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய அதிகாரத்தினை தமிழ் மக்களிற்காக ஒருமுறையும் பயன்படுத்தவில்லை.

குறிப்பாக ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கூட அது பயன்படவில்லை. இது தான் இலங்கையின் நியதி.

எனவே ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டும். அதற்கான சரியான பேரம்பேசலுக்கான சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டுள்ளது. எனவே பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து இதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அரசியல் மாற்றம் தொடர்பாக பேசுபவர்களுடன் நாம் நிபந்தனையை முன்வைக்க வேண்டும்.உடனே சென்று கை எழுத்துப்போடும் நிலை இருக்க கூடாது என்றார்.

Tamil News