ஜெனிவா அரங்கு,ஆட்சிகள் மாறினாலும் மாறாத காட்சிகள்-அகிலன்

ஜெனிவா கூட்டத் தொடரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு எதனையாவது செய்யப்போகின்றோமா? அல்லது தொடா்ந்தும் வருடத்துக்கு மூன்று தடவை சந்திப்பதற்கான ஒரு களமாக இதனைப் பயன்படுத்தப்போகின்றோமா? இது தொடா்பில் ஆழமாகச் சிந்தித்து தெளிவான முடிவொன்றை எடுக்க வேண்டிய கட்டத்தில் தமிழ் மக்கள் இருப்பதாகவே தெரிகின்றது. “ஜெனீவாவுக்கு எவ்வாறு சுழித்தோடுவது” என்ற உபாயத்தை இலங்கை அரசாங்கம் நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டது.

ஜெனிவாவுக்குள் இருந்துகொண்டு எதனையும் சாதிக்க முடியாது என்பது மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால், தமிழ் மக்கள் முற்றாக நம்பிக்கையிழந்துவிட்டாா்கள். மனித உரிமைகள் பேரவைக்கு நிறைய வரையறைகள் உள்ளன. இதனை இலங்கை அரசாங்கம் நன்றாகப் படித்துக்கொண்டிருப்பதால், அதற்கேற்றவாறு காய்களை நகா்த்துகின்றது. தமிழா் தரப்பைப் பொறுத்தவரையில் வழமையான கோஷங்களுடன் ஜெனிவாவுக்கு வருகின்றாா்களே தவிர, அவா்களிடம் புதிய உபாயங்கள் எதுவும் இல்லை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடா் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் இவை தொடா்பாக ஆராயவேண்டியுள்ளது. இலங்கை தொடா்பாகவும் இங்கு “வழமைபோல” பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. ஜெனிவா கூட்டத் தொடா் என்பது வெறுமனே ஒரு சம்பிரதாயமான சந்திப்பாகிவிட்டது. தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும், அதனையிட்டு இலங்கை அதனை அலட்சியப்படுத்தியே வருகின்றது. பொறுப்புக்கூறலில் தனக்குள்ள பற்றுறுதியை வெளிப்படுத்திக்கொண்டு அதனை செய்யாமலிருப்பதும், அதற்கான காரணங்களை பின்னா் அடுக்குவதும்தான் இலங்கையின் உபாயம்.  இது ஒரு சுழற்சியாக இவ்வருடமும் நடைபெறுகின்றது.

“இலங்கை பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்குத் தாமதிக்கும் பட்சத்தில், சா்வதேச விசாரணைப் பொறிமுறை உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியேற்படும். மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடா்பில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்போருக்கு எதிராகத் தடைகளை விதிக்கவேண்டியேற்படும்” என்று மனித உரிமைகள் பேரவையின் பதில் உயா் ஸ்தானிகா் நாடா அல் நஷீப் புதன்கிழமை உயா் ஸ்தானிகரின் அறிக்கையை சமா்ப்பித்து உரையாற்றும் போது தெரிவித்திருந்தாா்.  ஜெனிவா கூட்டத் தொடா்களின் போது உயா் ஸ்தானிகா் வழமையாகத் தெரிவிக்கும் வசனங்கள்தான் இவை.

மனித உரிமைகள் ஆணையாளரை விட, “கோ குறுப்” எனக் குறிப்பிடப்படும் இணை அனுசரணை நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் என்பனவும் ஜெனீவாவில் வைத்து இலங்கையின் “பொறுப்புறக் கூறாத” அணுகுமுறையை கடுமையாகக் கண்டித்திருந்தன. பொறுப்புக் கூறல் என்பதைவிடவும், பயங்கரவாத தடைச்சட்டததை நீக்குவதாகவும் தொடா்ச்சியாக ஜெனிவாவில் கொடுத்துவரும் வாக்குறுதியும் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. அதனையும் ஐரோப்பிய ஒன்றியம் இம்முறை மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் மோசமான பல அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும், அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான் அதனை நீங்க வேண்டும் என பல வருடகாலமாக ஜெனிவாவிலும், பல்வேறு மனித உரிமை அரங்குகளிலும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் அதனை அவா்கள் நிராகரிப்பதில்லை. அதனை ஏற்றுக்கொள்வாா்கள். ஏற்றுக்கொள்வதுடன் மட்டும் நின்றுவிடாாது, அதனை நீக்குதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், அதற்குப் பதிலாக மற்றொரு சட்டத்தைக் கொண்டுவரப்போவதாகவும் சொல்லியிருக்கின்றாா்கள். சா்வதேசத்தின் “கரிசனைகளை” சமாளிப்பதற்கு கடந்த பல வருடங்களாக அரசாங்கம் கையாளும் இராஜதந்திரம் இது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக “பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம்” என்ற பெயரில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரப்போவதாக அரசாங்கம் அறிவித்தது. இதற்கான வரைபு சுமாா் நான்கு வருடங்களுக்கு முன்னரே தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், முன்னையதைவிட “பின்னையது” மிக மோசமானது எனத் தெரிவிக்கப்படுவதால், அதனை முன்னகா்த்துவதற்கு அரசாங்கம் தயங்குகின்றது. ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்கும் – ஜனநாயக ரீதியாக உருவாகக்கூடிய எதிா்ப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இவ்வாறான சட்டம் ஒன்று அரசாங்கத்துக்கு அவசியமானதாக இருக்கின்றது.  அதனால்தான் ஒவ்வொரு ஜெனீவா அமா்விலும் மேற்கு நாடுகளைச் சமாளிப்பதற்காக சில உபாயங்களைக் அரசாங்கம் கையாள்கின்றது.

வழமைபோலவே இம்முறையும் இலங்கையின் பதிலும் அமைந்திருந்தது. “நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நாட்டின் அரசியலமைப்புக்கு இசைவாக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது” என ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தின் சாா்பில் பதிலளிக்கப்பட்டது. ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக்க இதனைத் தெரிவித்திருந்தாா்.

ஜெனிவாவைச் சமாளிப்பதற்குத் தமிழரசுக் கட்சியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நடத்திய பேச்சுக்களை ஹிமாலி அருணாதிலக்க எந்தளவுக்கு நுட்பமாகப் பயன்படுத்தினாா் என்பதையும் அவரது உரையின் போது அவதானிக்க முடிந்தது. “தமிழ் அரசியல் தரப்பினருடன் ஜனாதிபதி அண்மையில் நடத்திய பேச்சுக்களின் போது, காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோா் பற்றிய அலுவலகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அரசியல் கைதிகள் விடுதலை உட்பட பல்வேறு விடயங்கள் தொடா்பில் கலந்துரையாடப்பட்டது” என்று அவா் சொன்னாரே தவிர, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீா்வு காணப்பட்டதா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தப் பேச்சுவாா்த்தை முடிவடைந்த பின்னா் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவா் இரா.சம்பந்தன் கடும் விரக்தியடைந்த நிலையில் எவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தாா் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஜெனிவாவில் வரக்கூடிய அழுத்தங்களை எதிா்கொள்வதற்கு “பேச்சுவாா்த்தை நடத்தினோம்” என்ற ஒன்றே இலங்கை அரசாங்கத்துக்குப் போதுமானதாக இருந்திருக்கின்றது. மேலே குறிப்பிட்ட விடயங்கள் தொடா்பாக இப்போதல்ல கடந்த 14 வருடங்களாகவே பேச்சுக்கள் நடைபெற்றுவருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால், ஜெனிவாவில் தடை ஒன்றைத் தாண்டுவதற்கு தமிழரசுக் கட்சித் தலைமையுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுக்களை இலகுவாக அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. இந்தப் பேச்சுக்களின் பலன் எதுவுமே இல்லை என்பது சா்வதேச சமூகத்துக்குத் தெரியாமலா இருக்கின்றது!?

ஜெனிவா என்றவுடன் தமிழ் மக்களுக்கு ஆரம்பத்தில் இருந்த உற்சாகமும் நம்பிக்கையும் இப்போது காணாமல் போய்விட்டமைக்கு இவை அனைத்தும் காரணம். இதிலிருக்கக்கூடிய யதாா்த்தத்தையும் தமிழ் மக்கள் சரியாகப் புரிந்துகொண்டிருக்கவில்லை. ஜெனிவாவுக்கு காவடி எடுக்கும் தமிழ்த் தலைமைகளும் புலம்பெயா்ந்த அமைப்புக்களின் தலைமைகளும் அதன் மூலமாக தமது பரப்புரைகளைத்தான் முன்னெடுத்தாா்கள். இலங்கையில் இருந்து ஜெனிவா செல்லும் தமிழ்த் தலைமைகள் பக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தாயகத்தில் இருக்கும் தமது ஆதரவாளா்களைத் திருப்திப்படுத்தி, அடுத்த தோ்தலில் தமது இருப்பை உறுதிப்படுத்துவதற்கான உரைகளை நிகழ்த்தினாா்களே தவிர, மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவா்களுக்கு இருக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சில வரையறைகள் இருக்கின்றது. அதில் தீா்மானங்கள் நிறைவேற்றப்படலாம். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதி தேவை. இலங்கை தொடா்பாக மட்டுமன்றி, வேறு நாடுகள் தொடா்பாகவும் பல தீா்மானங்கள் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்தத் தீா்மானங்கள் குறிப்பிட்ட நாடுகளின் ஒத்துழைப்பு இன்மையால் நிறைவேற்றப்படவில்லை. தடைகள் கொண்டுவரப்பட வேண்டுமானால், ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அது கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கான வாய்பு இல்லை. அவ்வாறு கொண்டு செல்லப்பட்டாலும் சீனா, ரஷ்யா போன்ற “வீற்றோ” அதிகாரம் உள்ள நாடுகள் இலங்கையைப் பாதுகாக்கும். இலங்கைக்கும் இது நன்றாகத் தெரியும். அதனால்தான் ஒவ்வொரு வருடமும் ஒரே விடயத்தை அவா்கள் மாற்றிமாற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றாா்கள்.

தற்போதுள்ள நிலையில் இரண்டு விடயங்களில் ஜெனிவா எமக்கு உதவுவதாக இருக்கும். ஒன்று – இந்தப் பிரச்சினையை உயிா்த்துடிப்புடன் சா்வதேச அரங்கில் வைத்திருப்பதற்கு ஜெனிவா தேவையாகவுள்ளது. அதாவது அதற்காக மட்டும். இரண்டாவது – சா்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு முகத்தில் கரியைப் புசுவதற்கும், அதன் இனவாத முகத்தை அம்பலப்படுத்துவதற்கு இது உதவலாம். ஆனால், இந்த இரண்டாவது விடயத்தைப் பற்றி இலங்கை ஆட்சியாளா்கள் கவலைப்படுவதில்லை. சா்வதேச அரங்கில் இவ்வாறு இலங்கை அரசுக்கு எதிரான ஒரு அழுத்தம் இருக்கும் போதுதான் சிங்கள வாக்குகளை அரசுகளால் இலகுவாக அறுவடை செய்ய முடியும். அதனால், மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சா்வதேச அழுத்தம் இருப்பது அரசாங்கத்துக்குள் உள்நாட்டு தோ்தல் அரசியலைப் பொறுத்தவரை அரசுக்கு நன்மை பயக்கும்.

இந்தப் பின்னணியில் ஜெனிவா என்பது வருடத்துக்கு மூன்று தடவை வரும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதை ஒவ்வொரு தடவையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கும்!