கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது!

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கைது செய்யப்பட்டு இன்று (5) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை – தீனியாவள பகுதியில் மறைந்திருந்தபோது, நேற்று முந்தினம் (3) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர், நேற்று  (4) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காவல்துறையினரின் கைதிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தனது கைப்பேசி சிம் (SIM) அட்டையையும் வாகனத்தையும் மாற்றியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றபோது நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2018 ஓகஸ்ட் 8 ஆம் திகதி அன்று அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு, 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அத்தண்டனைகளை 6 வருட காலப்பகுதிக்குள் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவித்தார். எனினும், பிரகீத் ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா ஏக்னலிகொட தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதியன்று அந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மனு செப்டெம்பர் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்தே, ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான பிடியாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.