தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையின் வெளிப்பாடே கஜேந்திரனின் கைது- ICET

110 Views

கஜேந்திரனின் கைது

“இனப் படுகொலையாளி கோட்டாபய ஆட்சியில் சாதாரண தமிழப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையின் தெளிவான அறிகுறியே  பாராளுமன்ற உறுப்பினர்  செ.கஜேந்திரனின் கைது”  என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக் காட்டியுள்ளது.

தியாகி திலீபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளையில் காவல் துறையினரால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜா கஜேந்திரன் (த.தே.ம.மு) கைது
செய்யப்பட்டதை அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை வன்மையாகக் கண்டிக்கிறது. எங்கள் தாயகத்தில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது உண்ணாநோன்பிருந்து தன் இன்னுயிரை நீத்த தியாக தீபம் திலீபனை நினைவுகூர்ந்து விளக்கு ஏற்றியதற்காக ஏற்றிய தீபத்தைக் காலால் உதைத்ததோடு சிறிலங்காக் காவல்துறை அவரை அநாகரீகமான முறையில் கைதும் செய்தனர். இனப்படுகொலையாளி கோத்தபாய ஐ.நா மன்றில் பொய்யுரைத்து இன்மொழியில் சமாதானம் பேசுகையில் அவரின் ஏவலாளிகள் தமிழர்களின் நெஞ்சில் எட்டி உதைத்துள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களுக்காக உயிர் நீத்த உன்னத மனிதருக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தற்கான தனது மனித உரிமையைக்கூட சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாவிட்டால், பெரும்பான்மையான சாதாரண தமிழர்களால் இராணுவத்தால் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் உரிமை நசுக்கப்படும் என்பதே யதார்த்தம்.

இனப்படுகொலையாளி கோத்தபாய ஆட்சியில் சாதாரண தமிழ் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையின் தெளிவான அறிகுறியாகவே இந்தச் சம்பவத்தைப் பார்க்கவேண்டும்.

நடந்த சம்பவமானது படுமோசமான சனநாயகப் படுகொலை ஆகும். பௌத்த தர்மத்திற்கே ஒவ்வாத அருவெருப்பான அச்சுறுத்தலை உருவாக்கி தமிழர்களின் உரிமைகளையும் நினைவுகூரல்களையும் அடக்கி ஒடுக்குவதிலேயே சிங்கள இனவழிப்பு அரசு தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.

சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கைது மற்றொரு அடக்குமுறை வடிவத்தைக் குறிக்கிறது. தமிழ்மக்கள் மீது துப்பாக்கி
முனையில் இராணுவ மிரட்டல்களைவிடுத்து தமிழர்களின் அமைதிவழி நினைவேந்தல்களை தொடர்ந்து நசுக்குவதிலே சிங்கள அரசு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் இந்த தன்னிச்சையான கைது ஈழத்தில் வசிக்கும் சாதாரண தமிழ் மக்களின் இருப்பையும்
உரிமைகளையும் நசுக்குவதாகவே அமைகின்றது, மனித உரிமை பேசும் சர்வதேச அரசுகளும் இவ்வாறன சிங்கள அரசின் இழிசெயல்களைப் பார்த்தும் பார்க்காதது போல் கைகட்டி வாய்பொத்தி தமது நலன்களுக்காக தமிழினத்தைப் பலி கொடுக்கின்றனர்.

48 வது மனித உரிமை ஆணையக அமர்வின் போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் தனது 2021 செப்டம்பர் அறிக்கையில், ‘பல அமைதியான போராட்டங்கள் மற்றும் நினைவுகூரல்கள் அதியுச்ச அடக்குமுறையைப் பயன்படுத்துவதாகவும் தனிமைப்படுத்தல் மையங்களில் அமைதிவழிப் போராட்டக்காரர்களை அத்துமீறிக் கைது செய்யப்படுகிறார்கள்” என்று கோடிட்டுக் குறிப்பிட்டார். இன்றும் பசியோடு இருக்கும் பார்த்திபன் கனவு பலிக்க வெடிக்கட்டும் மக்கள்
புரட்சி” என்று கூறப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply