கஜேந்திரகுமார் உள்ளிட்ட தரப்பினர் தமிழகத்துக்கு பயணம்…

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று(16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் இவ்வாறு தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக ஸ்ரீலங்கா அரசு ஐக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியப் பேரவையினர் இந்த நேரத்தில் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது ஒரு நல்ல விடயம் என்று தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் எமது பின்னடைவுகள் குறித்து தமிழக அரசியல் பிரமுகர்களுடனேயோ அல்லது வேறு தரப்பினரிடையேயோ கலந்துரையாடி, நிலைமைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதை ஒரு நல்ல விடயமாகவேபார்க்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.