இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன் பிரச்சினைகள், கிரிப்டோ நாணயங்கள் மற்றும் உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள் குறித்து ஜி-20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் விவாதிப்பார்கள் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை முதல் எதிர்வரும் 25 திகதி வரை பெங்களூரில் இதற்கான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஜி-20 அமைப்பின் தலைமையை, இந்தியா ஏற்றதும் இடம்பெறும் முக்கிய நிகழ்வு இதுவாகும். நெருக்கடியான பொருளாதாரங்களுக்கான கடன் மறுசீரமைப்பைத் தடுப்பது மற்றும் யுக்ரைனுக்கான உதவியை அதிகரிப்பது என்பன இந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க திறைசேரியின் செயலர் ஜெனட் யெல்லன், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கான கடன் நிவாரணத்தை ‘விரைவாக வழங்க’ சீனாவை இந்த சந்திப்பின்போது வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய இறையாண்மைக் கடன்கொடுனரான, சீனா உட்பட கடன் கொடுனர்களிடம், கடன்களை பாரிய அளவில் குறைக்குமாறு கேட்டுக்கொள்வதன் மூலம், கடன்பெற்ற நாடுகளுக்கு உதவ, ஜி-20 நாடுகளுக்கு, இந்தியா ஒரு முன்மொழிவைத் தயாரித்து வருவதாக ரோய்ட்டர்ஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.