நான்கு தசாப்தங்கள் கடந்தும் நெஞ்சில் ஆறாத தீ

தமிழ் மக்களின் அறிவுக் களஞ்சியமாக விளங்கிய யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 41 வருடங்கள் கழிந்துவிட்டன. 1987ம் ஆண்டு 5ம் மாதம் 31ம் திகதி நள்ளிரவு  வேளையில் மூட்டப்பட்ட அந்த தீ, நாலு தசாப்தங்களுக்குப் பின்னரும், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அந்த தீ ஆறாமல் கனன்று கொண்டிருக்கின்றது. தமிழினத்தின் கல்வி – புலமை சார் பண்பாட்டு கலாசார மையமாக விளங்கிய யாழ் நூலகத்தை அரச வன்கொடுமையாளர்கள் தீயிட்டு எரித்து நாசமாக்கினர்.

தமிழினத்தின் மூல வேரை அறுத்து  மேற்கொள்ளப்பட்ட ஓர் இன அழிப்பாக அந்தச் சம்பவம் பதிவாகி இருக்கின்றது. இதன் காரணமாகவே அந்தத் தீ மிக மோசமான மனவடுவாகத் தமிழர்களின் மனங்களில் இன்னும் படிந்திருக்கின்றது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாவட்ட சபைகள் பிரேரிக்கப்பட்டு அவற்றுக்கான தேர்தல்கள் நடைபெற்ற தருணம் அது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பேரின அரசின் பெருந் தந்திரவாதியமாகிய ஜேஆர் ஜயவர்தன ஜனாதிபதியாக கோலோச்சிக் கொண்டிருந்தார். இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் அவர் செயற்பட்டிருந்தார்.

தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து, 1977 இல் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தலைவர்கள் மீது, ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்த தமிழ் இளைஞர்கள், சீற்றம் கொண்டிருந்தனர். போராளிகளின் எச்சரிக்கையை மீறி, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்த தமிழ் வேட்பாளர் மீதும் அந்தச் சீற்றம் பாய்ந்தது. தனது கட்சி வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஜயவர்தனவினால் சீரணிக்க முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற வன்மம் கொண்டிருந்தார்.

அவருக்கு கமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ்ப் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வாய்ப்பாக அமைந்துவிட்டது. அரச படைக்குண்டர்களை ஏவிவிட்டு யாழ் நகரையே தீக்காடாக்கினார். காமினி திசாநாயக்க, சிறில் மத்தியு ஆகிய அமைச்சரவை அந்தஸ்து கொண்ட இரண்டு அமைச்சர்களின் மேற்பார்வையில் இந்த அட்டூழியம் நிறைவேற்றப்பட்டது.

கட்டவிழ்த்துவிட்ட நிலையில் பாய்ந்த சீருடைப் படையினரும் அரச சிவிலுடைப் படைக்குண்டர்களும் 3 தினங்கள் தமது அட்டூழியத்தைத் தொடர்ந்தனர். யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெ.யோகேஸ்வரனின் வீடு எரிக்கப்பட்டது. அவர் தெய்வாதீனமாகத் தப்பியோடினார். யாழ் நூலகம் அடித்து உடைக்கப்பட்டு, அங்கிருந்த 97 ஆயிரம் பெறுமதி மிக்க புத்தகங்கள் குவிக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. நூலகக் கட்டிடமும் எரித்து  தேசமாக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் யாழ் நகர வர்த்தக நிலையங்கள் கலாசார மற்றும் மத அடையாளங்களாக அமைக்கப்பட்டிருந்த பல தமிழ்ப்பெரியவர்களின் சிலைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை அலுவலகமும் தாக்கி அழிக்கப்பட்டது. அதன் ஆசிரியர் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இந்த அரச வன்முறைகளின்போது வீடுகளில் இருந்த அப்பாவிகளும் வெளியில் இழுத்துக் கொல்லப்பட்டார்கள்.

தமிழ்ப் பாரம்பரிய வாழ்க்கைக் கலாசாரத்தைப் பிரதிபலித்த பல ஆயிரம் ஓலைச் சுவடிகள், தமிழ்த் தத்துவவாதியும், கலைஞரும் எழுத்தாளருமாகிய ஆனந்த குமாரசாமி மற்றும் தமிழறிஞர் ஐசக் தம்பையா ஆகியோர் எழுதிய பல புத்தகங்கள் பிரதிகள் என்பனவும் எரித்து நாசமாக்கப்பட்டன.

இருபது வருடங்களின் பின்னர் அரச செய்தித்தாளாகிய டெய்லி நியூஸ் 2001 ஆம் ஆண்டு தனது ஆசிரிய தலையங்கம் ஒன்றில் அரசாங்கத்தினால் ஏவிவிடப்பட்ட குண்டர் படையினரே யாழ் நூலக எரிப்பு உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டிருந்தனர் என குறிப்பிட்டது.

பல வருடங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா, மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் யாழ் நூலக எரிப்பும் யாழ் வன்முறைகளும் அரச தரப்பினருடைய செயற்பாடே என அரசியல் ரீதியில் குற்றம் சுமத்தியிருந்தனர். ஆனால்  இன அழிப்பு நோக்கம் கொண்ட அந்தக் கொடூர பாதகச் செயலுக்குக் காரணமானவர்கள் எவரும் கண்டறிந்து தண்டிக்கப்படவில்லை. நீதி நிலை நிறுத்தப்படவுமில்லை. அன்று தொடங்கிய தமிழினத்தின் மீதான இன அழிப்பு நடவடிக்கைகள் இன்னும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

Tamil News