மன்னாரில் சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு முன்னாள் பெண் போராளி ஒருவர் சென்றதாக கூறப்படும் விடயம் தமிழர் தாயகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்த சூழல்நிலைக்கு தள்ளப்பட்மைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பகுதியில் வட்டி தொல்லை தாங்காமல் முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்புக்கு சென்று விற்று தனது கடனை கட்டியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கடனை கட்டிய பின்னரும் முன்னாள் போராளிக்கு வட்டி கும்பல் தொடர்ந்து கடன் கட்டவில்லை என மிரட்டல்கள் விட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் இன விடுதலைக்கும் தொடர் அடக்குமுறைக்கும் தமது இளமை காலத்தை முழுவதும் போராட்டத்தில் கழித்து இப்போது தமது குடும்ப வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்து கொண்டுள்ள முன்னாள் போராளிகளின் நிலைமை தற்போது கேளிக்கையாகவும் வருத்தமாகவும் உள்ளது” என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமது அன்றாட வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முன்னாள் போராளிகள் பல சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் தமது குடும்ப வாழ்க்கையில் தாம் ஒவ்வொரு நாளும் குடும்ப சுமையை நகர்த்தி செல்வதற்கு தமது வருமானம் போதாத காரணத்தால் கடன் மற்றும் சீட்டு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.



