யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி: வலிகாம மக்கள் ஏமாளிகளா?

151 Views

பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி

யாழ். மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் காபெற் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம், மானிப்பாய் – பொன்னாலை வீதியும் புனரமைக்கப்படுகின்றது. பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நீண்ட காலம் தாம் எதிர்கொண்ட போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கப் போகின்றது என மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், வீதியின் புனரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது.

யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் ஊடாக பொன்னாலைச் சந்தி வரை இந்த வீதி புனரமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த வீதி யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை ஊடறுத்துச் செல்கின்றது. அதேபோன்று, யாழ்.மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வலி.தென் மேற்கு, வலி.மேற்கு ஆகிய பிரதேச சபைகளும் இதில் அடங்குகின்றன.

வீதிப் புனரமைப்பு வேலைகள் ஆங்காங்கே ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. மானிப்பாய் சந்தியில் இருந்து சங்கானை வரை வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் ஆரம்ப வேலைகள் முடிவடைந்து காபெற்று இடும் பணி மட்டுமே எஞ்சியிருக்கின்றது.

பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி

ஆனால், மிகக் கவலையான விடயம் என்னவெனில், இந்த வீதிப் புனரமைப்பின்போது வீதி அகலிக்கப்படவில்லை என்பதுடன் வீதியில் உள்ள மதகுகள் புனரமைக்கப் படாமல் அவற்றுக்கு மேலாக காபெற் வீதி அமைக்கப்படுகின்றது. ஏற்கனவே சேதமடைந்து அடுத்த சில வருடங்களிலேயே இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ள மதகுகளைக்கூட புனரமைக்காமல் அவற்றுக்கு மேலாக காபெற் இடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அருகில் இடம் இருக்கும் இடங்களில் மட்டும் வீதி அகலமாகவும் ஏனைய கடைத்தொகுதிகள், இதர கட்டடங்கள் உள்ள இடங்களில் ஒடுக்கமாகவும் வீதி புனரமைக்கப்படுகின்றது. வீதியோரம் இடையூறாக நிற்கும் மரங்கள்கூட தறிக்கப்படவில்லை. ஏனைய இடங்களில் குறிப்பாக, பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி, பருத்தித்துறை வீதி போன்றன புனரமைக்கப்பட்ட போது மக்கள் கட்டிடங்களை பின்னகர்த்தி வீதிப் புனரமைப்பிற்கு இடமளிக்கவில்லை. இதனால் புனரமைப்பிற்கு தடை ஏற்பட்டது.

எனினும், தொடர்ச்சியாக மக்களுக்கும் வர்த்தகர்கள் மற்றும் இதர தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலம் அவர்கள் தமது கட்டிடங்களை பின்னகர்த்தி இடமளித்தனர். இன்று குறித்த வீதிகள் போக்குவரத்திற்கு மிக சிறந்தவையாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்த வேலைத்திட்டம் யாழ்.-மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால், வீதியின் ஆரம்ப புனரமைப்பு இடம்பெற்று காபெற் இடுகின்ற வேலை நடைபெற்று வரும் நிலையில் – தற்போது – வலி.தென்மேற்கு பிரதேச செயலகம் ஆங்காங்கே சில கூட்டங்களை நடத்தி மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வலி.மேற்கு பிரதேச செயலகமும் இதற்கான சில கூட்டங்களை நடத்தியிருக்கின்றது.

மானிப்பாய் மற்றும் சங்கானை போன்றன எதிர்காலத்தில் நகர சபைகளாக தரம் உயர்த்தக்கூடிய நிலையை எட்டியுள்ளன. ஆனால், இந்த நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சாதாரண நாள்களிலேயே இங்கு சனநெரிசல் அதிகமாக உள்ளது. பண்டிகை காலங்களில் போக்குவரத்துச்செய்ய முடியாமல் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக வர்த்தகர்களும் மக்களும் விழிப்பூட்டப்படவேண்டும். குறிப்பாக, மானிப்பாய், சங்கானை வர்த்தக சங்கங்கள் இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுக்கவேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, மதகுகள் புனரமைக்கப்படாமை தொடர்பாக உடனடியாக கரிசனை செலுத்தப்படவேண்டும். வலி.தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பிரதானமான ஆறு மதகுகள் எந்தவித புனரமைப்பும் இன்றி அதற்கு மேலாக காபெற் இடப்படக்கூடிய நிலைக்கு புனரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.

253638836 4676982379024729 6650533266244740576 n யாழ். – மானிப்பாய் - பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி: வலிகாம மக்கள் ஏமாளிகளா?

மானிப்பாய் – பொன்னாலை வீதியில் மானிப்பாய் சந்திக்கு சமீபமாக உள்ள மதகு, கட்டுடைச் சந்தியில் உள்ள மதகு, மற்றும் சண்டிலிப்பாய் சந்திக்கு சமீபமாக ஐந்துகண் மதகுக்கு அருகே உள்ள இரு மதகுகள், மேலும் சண்டிலிப்பாய் – சங்கானை வீதியில் ஐயனார் சிலையடிக் சமீபமாக இரு மதகுகள் என்பன எந்தவித புனரமைப்பும் செய்யப்படவில்லை. ஆறு மதகுகளும் பெருமளவில் சேதமடைந்த நிலையிலேயே உள்ளன. அடுத்துவரும் சில ஆண்டுகளில் மதகுகள் இடிந்துவிழக்கூடிய அபாயம் உள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பெரு வீதிகள் புனரமைப்பின்போது மதகுகளும் புனரமைப்பிற்கு சேர்த்தே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழiயானது. யாழ்ப்பாணத்தில் காபெற் வீதியாக புனரமைக்கப்பட்ட அத்தனை வீதிகளிலும் ஒரு மதகுகூட புனரமைக்கப்படாமல் விடப்படவில்லை.

ஆனால், மேற்படி வீதியில் உள்ள மதகுகளை புனரமைக்காமல் அதற்கு மேலாக காபெற் இடப்படும் செயற்பாடு இடம்பெறுவது மோசடியானது. இதுவரை இவ்வாறு ஆறு மதகுகள் புனரமைக்கப்படவில்லை. இதன்மூலம் மக்கள் வெளிப்படையாக ஏமாற்றப்பட்டு எங்கோ உயர் மட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெறுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விடயம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வலி.தென்மேற்கு பிரதேச சபையில் பேசுபொருளாக இருந்தது. கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் த.கஜதீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமைகளை அவதானித்தனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட வீதிப் புனரமைப்புடன் சம்பந்தப்பட்ட பொறியியலாளர்கள் நிலமையை சமாளித்துவிட்டுச் சென்றனர்.

கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழேயே இந்த வீதி புனரமைக்கப் படுகின்றது எனவும் ஆறு மாதங்களுக்குள் இத்திட்டத்தை முடிவுறுத்த வேண்டும் என்பதால் இப்போது மதகுகளை அமைக்காமல் வேலைகள் முடிவடைந்த பின்னர் அமைத்துத் தருவோம் என அவர்கள் கூறினர். முதற்கட்டமாக அதற்குரிய சில பணிகளை இப்போதே தாம் முன்னெடுப்பார்கள் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேற்படி பொறியியலாளர்கள் எதுவும் தெரியாத அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். கிராமிய வீதிகளை (ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை) புனரமைக்கும் திட்டத்தின் கீழேயே கொக்குவில் – வட்டுக்கோட்டை, கட்டுவன் – மல்லாகம் – சங்கானை, யாழ்.- பொன்னாலை – பருத்தித்துறை, சண்டிலிப்பாய் – சேந்தாங்குளம் ஆகிய வீதிகளும் புனரமைக்கப்படுகின்றன. இந்த வீதிகள் உரிய விதிகளுக்கு கீழ், பாலங்கள், வடிகால்கள் புனரமைக்கப்பட்டு, மதில்கள் பின்னகர்த்தப்பட்டு நேர்த்தியாக புனரமைப்பு பணி இடம்பெறுகின்றது. ஆனால், யாழ்-மானிப்பாய்-பொன்னாலை வீதிக்கு மட்டும் என்ன புதிய நடைமுறை?

உயர் அதிகாரிகள் வழங்கும் போலி உறுதிமொழிகளை மக்களோ உள்ளுர் அதிகாரிகளோ ஏற்றுக்கொள்ளக் கூடாது. அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிப்பது காலதாமதம் ஆகுமெனில் காலத்தை நீட்டிப்பதற்கும் பல வழிகள் உள்ளன. ஆனால், காலத்தைக் காரணம் காட்டி அரைகுறை அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு இடமளிக்க முடியாது. யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச தரப்பு அமைச்சர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆகியோரும் இவ்விடயத்தில் அக்கறை இன்றி இருப்பதாகவே தெரிகின்றது.

தினமும் அதிகமான மக்கள் பயணிக்கும் பெரு வீதி ஒன்றை அரைகுறையாக புனரமைப்பதற்கு அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுர் அரசியல்வாதிகளான பிரதேச சபை உறுப்பினர்கள் தற்றுணிபுடன் செயற்பட வேண்டும். குறிப்பாக, வலி.தென் மேற்கு, வலி.மேற்கு ஆகிய பிரதேச சபைகள் தமக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டும்.

252903542 4676982215691412 5079068973328440960 n யாழ். – மானிப்பாய் - பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி: வலிகாம மக்கள் ஏமாளிகளா?

அபிவிருத்தி என்பது மக்களுக்கானதே அன்றி அதிகாரிகளுக்கோ அரசியல்வாதிகளுக்கோ உரியதல்ல. எனவே, பாலங்கள், மதகுகள் அனைத்தையும் பூரணமாக கட்டி முடித்த பின்னர் வீதியை அமைக்குமாறு உயர் மட்டத்தினருக்கு மக்கள் இடித்துரைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான கல்விமான்கள் தினமும் சென்றுவரும் வீதியில், வெளிப்படையாக பெரும் மோசடி இடம்பெறுவதை தடுத்து நிறுத்தவில்லையாயின் அனைவரும் குற்றவாளிகளே.

என்.பிருந்தாபன்

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad யாழ். – மானிப்பாய் - பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி: வலிகாம மக்கள் ஏமாளிகளா?

Leave a Reply