கேர்சன் பகுதியில் இருந்து வெளியேற்றம் – ரஸ்யாவின் வெற்றி சாத்தியமா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

download 7 1 கேர்சன் பகுதியில் இருந்து வெளியேற்றம் - ரஸ்யாவின் வெற்றி சாத்தியமா? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் களமுனை இந்தவாரம் ஒரு திருப்புமுனையை சந்தித்துள்ளது. கேர்சன் பகுதியில் இருந்து தனது இராணுவத்தை வெளியேற்றப்போவதாக ரஸ்யாவின் சிறப்பு படை நடவடிக்கையின் கட்டளை அதிகாரி ஜெனரல் சுரோவிகின் தெரிவித்த ஆலோசனையை ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சர்  சொய்கு ஏற்றுக்கொண்டது மேற்குலக ஊடகங்களை அதிகம் ஆக்கிரமிக்கும் செய்தியாக வெளிவந்துள்ளன.

கேர்சன் பகுதியின் நிப்பர் ஆற்றுக்கு இடதுபுறமுள்ள பல படைப்பிரிவுகளை கொண்ட ஏறத்தள 30,000 படையினரை ரஸ்யா வெளியேற்ற தீர்மானித்துள்ளது. படையினரின் உயிர்களை பாதுகாப்பதும் அவர்களின் நலத்தை பேணுவதும் தான் முக்கிய நோக்கம் என்பதுடன், படைக்கலங்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதே தனது நோக்கம் என தெரிவித்துள்ள சுரோவிகின், இந்த படையினரை வேறு ஒரு களமுனையில் தாக்குதலுக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையிலும் கேர்சன் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 9500 உக்ரைன் படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் களத்தில் இருந்து அகற்றப்பட்டதாகவும், ஒக்டோபர் மாதம் மட்டும் எல்லா களமுனைகளிலும் உக்ரைன் இராணுவம் 12,000 படையினரை இழந்துள்ளதாகவும் தமது தரப்பில் 1500 பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கேர்சன் பகுதியின் நிப்பர் ஆற்றுக்கு இடதுபுறமுள்ள பகுதிகளுக்கு விநியோகம் செய்வது என்பது மிகவும் கடினமானது, அங்குள்ள குடியிருப்புக்களும் இயங்குநிலையில் இல்லை. என ஜெனரல் தெரிவித்திருந்தார்.

அதேசமயம், உக்ரைன் படையினர் ஆற்றின் வடக்கு கரையில் படையினரையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர். கேர்சன் பகுதியில் 8 பிரிகேட் படையினரை உக்ரைன் கொண்டிருந்தபோதும் அங்கு இடம்பெற்ற சமர்களில் ஏற்பட்ட இழப்புக்களினால் அவை தமது போரிடும் தரத்தை இழந்துள்ளன. எனினும் அவற்றை மீள ஒழுங்கமைத்துள்ளது உக்ரைன்.

28ஆவது, 61ஆவது கவசப்படை பிரிகேட், 59 ஆவது மோட்டார் படையணி, 35 ஆவது ஈரூடக படையணி, 46 ஆவது வான்நகர்வு படையணி, 128ஆவது மலைத்தாக்குதல் பிரிகேட், 17 ஆவது டாங்கி பிரிகேட் அவை தவிர 3 எல்லைக்காவல் பிரிகேட் படையணிகளை கேர்சன் பகுதி மீதான தாக்குதலுக்கு தயார்படுத்தியுள்ளது உக்ரைன்.

ரஸ்யா அங்கு இராணுவத்தின் 76ஆவது, 106ஆவது வான்நகர்வு தாக்குதல் பிரிகேட், 22ஆவது கிரைமியா படை பிரிகேட், போன்ற படையினரை நிறுத்தியிருந்தது. 3 பிரிகேட் படையினரும், இரண்டு ஆயுதப்படை பிரிவுகளும் நிப்பர் ஆற்றுக்கு வலதுபுறமுள்ள பகுதிகளை பாதுகாக்க போதுமானது.

ஆனால் ரஸ்யா ஏன் கேர்சன் பகுதியை விட்டு வெளியேறியது என்ற கேள்வியுடன் இது படைத்துறை ரீதியாக ரஸ்யாவுக்கு இழப்பா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

கேர்சன் பகுதியை பாதுகாப்பதற்கோ அல்லது தொடர்ந்து முன்நகர்வதற்கோ தேவையான படை பலமும், ஆயுதபலமும் ரஸ்யாவிடம் உள்ளது. ஆனால் அதற்காக தனது படையினரை பாதகமான களமுனையில் இழப்பதற்கு ரஸ்யாவின் புதிய ஜெனரல் தயாராக இல்லை. ஏனெனில் கேர்சன் பகுதியில் உள்ள நீர்மின்உற்பத்தி நிலையத்தின்  காகோவாவ் நீரணையினை உக்ரைன் படையினர் தொடர்ந்து குறிவைத்து வருகின்றனர்.

அந்த அணை உடைக்கப்பட்டால் கேர்சன் பகுதியின் கிழக்குப் பகுதி முழுவதும் நீரில் மூழ்குவதுடன் ஆற்றுக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு விநியோகமும் தடைப்படலாம். எனவே தான் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் அந்த பகுதியில் உள்ள பெருமளவான மக்களை வெளியேற்றிய ரஸ்யா அதன் பின்னர் அந்த நீரணையின் நீர்மட்டத்தையும் இயலுமானவரை குறைத்திருந்தது. எனினும் அமெரிக்கா வழங்கிய நீண்டதூர HIMARS MLRS போன்ற ஏவுகணைகளும், பிரான்ஸ் மட்டும் ஜேர்மனி ஆகிய நாடுகள் வழங்கிய நீண்டதூர கெவிச்சர் பீரங்கிகளும் ரஸ்யா படையினருக்கு நெருக்கடியை கொடுத்திருந்தன.

62 பில்லியன் டொலர்கள் தான் ராஸ்யாவின் ஒருவருட பாதுகாப்பு செலவீனம் ஆனால் மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகள் ஏறத்தாள 54 பில்லின் டொலர்கள் என்றால் அதன் தாக்கத்தை நாம் எண்ணிப்பார்க்க முடியும்.

அதாவது இந்த அணையை உடைத்த பின்னர் ஒரு ஊடறுப்பு தாக்குதலை நடத்துவது உக்ரைனின் திட்டம். அணை உடைக்கப்பட்டால் 30,000 ரஸ்ய படையினரில் பொருளமவானர்களின் விநியோக வழிகள் தடைப்படும் என்பதுடன், படையினரையும், படைக்கலங்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதும் கடினமாகும். அதாவது ரஸ்யா மிகப்பெரும் ஆளணி மற்றும் படைக்கல இழப்புக்களை சந்திக்கும்.

ஏறத்தாள 10,000 படையினரை ரஸ்யா இழக்க நேரிடலாம். எனவே தான் ரஸ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த புதன்கிழமையில்(9) இருந்து ரஸ்யா படையினரை வெளியேற்றிவருகின்றது. வெளியேற்றம் முற்றாக நிறைவுபெற சில நாட்கள் எடுக்கும். அதன் பின்னர் உக்ரைன் படையினர் அந்த பிரதேசத்தை கைப்பற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் அதற்கான விடையை உக்ரைன் அரச தலைவரின் ஆலோசகர் மைக்கைலோ பொடலக் கடந்த வியாழக்கிழமை(10) தெரிவித்துள்ளார். அதாவது ரஸ்ய படையினர் ஒரு பொறியைவைத்து சென்றுள்ளதாக தாம் சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதாவது மக்களை வெளியேற்றி வெறுமையாக உள்ள பிரதேசம் மற்றும் நகரத்திற்குள் உக்ரைன் படையினரை வரவைத்து ஆற்றின் மறுபக்கமிருந்து ரஸ்யா தமது படை வளத்தை தாக்கிஅழிக்க போவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அந்த பிரதேசத்தில் கண்ணிவெடிகள் மற்றும் பொறிவெடிகள் என்பவற்றை ரஸ்யா பெருமளவில் விட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், எந்த அணை ரஸ்ய படையினருக்கு ஆபத்தாக இருந்ததோ அதே அணை தற்போது உக்ரைன் படையினருக்கு ஆபத்தாக மாறலாம். நீர்அணையை வைத்து ரஸ்யாவை மிரட்டிய உக்ரைன் படையினருக்கும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற மேற்குலகத்திற்கும் தற்போது அந்த அணையே ஆபத்தாக மாற்றம் பெற்றுள்ளது.

அதாவது கோசன் பகுதியில் இருந்து ரஸ்யாவின் வெளியேற்றத்துடன் போர் நிறைவடையப்போவதில்லை. மாறாக புதிதாக இணைத்துள்ள 3 இலட்சம் படையினருடன் ஒரு குளிர்கால தாக்குதலுக்கு ரஸ்யா ஆயத்தம் செய்துவருகின்றது.

மறுவளமான மேலும் 1000 விமான எதிர்ப்பு ஏவகணைகளை பிரித்தானிவும், 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்காவும் வழங்குவதாக தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் உதவித்திட்டத்தில் 100 கவச வாகனங்கள் மற்றும் ஏவுகணை இடைமறிப்பு ஏவுகணைகளும் உள்ளன. ஆயுதங்கள் பயிற்சிகள், படையினர், உளவுத்தகவல்கள் என அள்ளிவழங்கும் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள அத்தனை நடுகளுடனும் ரஸ்யா மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது நேட்டோவின் தலைவர் ஸ்ரோலன்பேர்க் கூறியதுபோல தான் இந்த போரில் ரஸ்யா வெற்றிபெற்றால் நேட்டோ தோல்வியடைந்ததாக அர்த்தம். ஏனவே ரஸ்யாவின் வெற்றி என்பது இலகுவானதல்ல ஆனால் ரஸ்யாவின் தோல்வியும் சாத்தியமில்லை அதாவது மெல்ல மெல்ல நேட்டோவும் மேற்குலகமும் இந்த போருக்குள் உள்வாங்கப்படுவதுடன், போரும் பல நாடுகளுக்கு பரவும் சாத்தியங்களும் அதிகரித்து செல்கின்றது.

எனவே தான் உக்ரைனில் கைப்பற்றப்பட்ட NLAW, FGM-148 “Javelin” ATGMs + FIM-92 “Stinger” MANPADS போன்ற நேட்டோவின் ஆயுதங்களை சுமந்தவாறு ரஸ்யாவின் Ilyushin-Il-76 விமானம் ஈரானில் தரையிறங்கியுள்ளதாக பிரித்தானியா ஊடகம் தெரிவித்துள்ளது.