சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைக் கண்டித்துள்ளனர்.
அத்துடன் தூதுக்குழுவினர் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையின்மையில் இருந்து விடுபடுவதற்கான உடனடி நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அழைப்பு விடுத்தது.
அதேநேரம் இலங்கை தொடர்பான அறிக்கைக்காக,மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான தங்கள் உறுதிப்பாட்டையும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட சூழ்நிலைகளில் உள்ள நபர்கள் மற்றும் குழுக்கள் மற்றும் அனைவரின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை திறம்பட மற்றும் சமமாக நிறைவேற்றுவதற்கான அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.