பெரும் சூழல் ஆபத்தினை மட்டக்களப்பில் ஏற்படுத்தப்போகும் எத்தனோல் தொழிற்சாலை- மட்டு.நகரான்

130 Views

வடக்கு கிழக்கில் தமிழர்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை பெறவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.வெறுமனே அபிவிருத்தி நோக்கிய பயணம் என்பது தமிழர்களின் இருப்பிற்கான ஆபத்தானதாகவே இருக்கும்.இது தொடர்பில் கடந்த காலங்களில் நாங்கள் பல விடயங்களை இலக்கு இதழிலில் எழுதியுள்ளோம்.

வடக்கு  கிழக்கின் தமிழர் தாயகப்பகுதியில் பொருளாதார கட்டமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக வளங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தொழில்துறைகள் முதலீடுகள் முன்னெடுக்கப்படும்போது  வடக்கு  கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக வலுவடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன.வெறுமனே உரிமை விடயங்களை மட்டுமே கையாளும் தன்மையினை மட்டும் முன்னெடுக்கும்போது பொருளாதார ரீதியான கட்டமைப்பு பலவீனமடையும் நிலையேற்படும்.

குறிப்பாக யுத்த காலத்தில் தமிழ் தேசிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெறுமனே யுத்தத்தினை மட்டும் முன்னெடுக்கவில்லை.அதற்கு சமாந்தரமாக கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் ஊடாக பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் பொருண்மியதுறை மூலம் முன்னெடுக்கப்பட்டது.30வருடமாக யுத்தம் நடைபெற்றபோதும் யுத்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக நலிவடையும் தன்மையிருக்கவில்லை.

ஆனால் யுத்தம் மௌனிக்கப்பட்டு 13வருடங்கள் கடந்துள்ள நிலையில்  வடக்கு  கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பொருளாதார நலிவடைந்த மக்களாகவே மாற்றமடைந்துவரும் நிலையினை காணமுடிகின்றது. சிங்கள அரசுகளினால் தொடர்ச்சியாக  வடக்கு  கிழக்கு பிரதேசம் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்டே வருகின்றது.

தமிழர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தால் அவர்களின் உரிமைப்போராட்டம் வலுவடைந்துவிடும் என்ற சிங்கள அரசுகளின் சிந்தனையே தமிழர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையாமல் தடுக்கும் நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் தாயகப்பகுதியில்  சிங்கள தேசம் இலாபம் அடையும் திட்டங்கள்   தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் கடந்த காலத்தில் இன்றைய ஜனாதிபதி ரணிலின் சகாவான அலோசியஸினால் ஆரம்பிக்கப்பட்ட எத்தனோல் மதுசார உற்பத்தி தொழிற்சாலை மீண்டும் பணியை ஆரம்பித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நல்லாட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் உள்ள கும்புறுமூலை,வேம்பு என்னும் கிராமத்தில் சுமார் 19 ஏக்கர் காணியில் அர்ஜுன்  அலோசியஸின் W.M. மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அங்கு எத்தனோல் மதுசார தொழிற்சாலை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த எத்தனோல் தொழிற்சாலையானது கல்குடா பிரதேச மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலானது என்பதுடன் மாவட்டத்தின் ஏனைய துறைகளிலும் பாதிப்பினை ஏற்படும் என்ற காரணங்களினால் அதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூக அமைப்புகளினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக குறித்த தொழிற்சாலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை சமநிலை கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறியிருந்த நிலையிலேயே குறித்த திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான எதிர்ப்புகள் தெரிவிக்கும் நிலைமையேற்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம்  ஆயிரக்கனக்காணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,நெல் உற்பத்திகளுக்கு சந்தைவாய்ப்புகள் கிடைக்கும்,சோளம் உற்பத்தி அதிகரிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்துறை மேம்படும்போன்ற பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு பெரும்பாலான வேலையாட்கள் வெளியிலிருந்தே கொண்டுவரப்படுவது நிதர்சனமான உண்மையாகும்.

குறிப்பாக கல்குடாவின் பாசிக்குடா பகுதியில் யுத்தம் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் உல்லாசப் பிரயாணத்துறையினை மேம்படுத்துவதற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதற்கும் எனக்கூறி பாசிக்குடா கடற்கரையினை அண்டியிருந்த 250க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அப்பகுதி தென்னிலங்கையை சேர்ந்த வசதிபடைத்தவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்பட்டு அப்பகுதியில் பாரியளவிலான உல்லாசவிடுதிகள் கட்டப்பட்டன. ஆனால் அவற்றில் அதிகளவானவர்கள் தென்னிலங்கையிலிருந்தே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.

இதேபோன்றே இன்று எத்தனோல் தொழிற்சாலையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்திகளுக்கு சந்தைப்படுத்தல் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழிற்சாலை ஒட்டுமொத்த மாவட்டத்தினையும் கடும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்லப்போகின்றது என்பதை உணர்வதற்கு உரியவர்கள் தவறிவருகின்றனர்.

இந்த தொழிற்சாலை மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் நிலைமை காணப்படுகின்றது.  நீர்வழங்கல் வடிக்காலமைப்பு ஊடாகவும் நீர்பெறுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலைமையில் 25வீதமான நீர்வளத்தை கொண்ட இந்த மாவட்டத்தில் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் இன்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்த தொழிற்சாலைக்கு நீர்வழங்க முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மாவட்டத்தில் எதிர்காலத்தில் பாரிய நீர்த்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.

இதேபோன்று தொழிற்சாலையிலிந்து வெளியேறும் கரியமில வாயுவினால் சூழல் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது.குறித்த கரியமில வாயுவின் தாக்கத்தினை கட்டுப்படுத்த 20ஆயிரம் மரங்கள் நடப்போவதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறியிருந்தாலும் அது சாத்தியமடைவதற்கான சந்தர்ப்பம் இல்லாத காரணத்தினால் எதிர்காலத்தில் மாவட்டத்தின் சூழல் பாரிய பாதிப்புகள் ஏற்படும்.

அத்துடன் இங்கு உற்பத்திசெய்யப்படும் எத்தனோல் மதுசாரம் நெல் மற்றும் சோளனை பயன்படுத்தி முன்னெடுக்கப்போவதாகவும் அவற்றினை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறானால் எதிர்காலத்தில் மாவட்டத்தில் அதிகளவான அரிசி தட்டுப்பாடு ஏற்படும்.

உற்பத்திகளுக்காக நிலங்களை அபகரிக்கும் நிலைமையும் ஏற்படும்.குறிப்பாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான கம்பனிகளின் தேவைகளுக்காக இவ்வாறான நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றதா என்ற  கேள்வியும் எழுந்துள்ளது.

எவ்வாறு இருந்தபோதும் இந்த தொழிற்சாலையானது எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும் ஒன்றாகவேயுள்ளது. கடந்த காலத்தில் இந்த தொழிற்சாலைக்கு எதிராக போராட்டங்களை நடாத்தயிவர்கள் இன்று மௌனமாக இதனை கடந்துசெல்லும் நிலையினை காணமுடிகின்றது. இந்த தொழிற்சாலை  நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்காரணமாக நிர்மாணப்பணிகள் தடைப்பட்ட நிலையில் குறித்த நிர்மாணப்பணிக்கு அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தடைவிதித்திருந்தார்.அவர் உருவாக்கிய போதைப்பொருள் தடுப்பு செயலணியும் இந்த எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

 ஆனால் தொழிற்படமுடியாத நிலையிலிருந்த தொழிற்சாலை இன்று மெல்ல தனது பணியை ஆரம்பித்துள்ளது.இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய சூழல் ஆபத்தினை எதிர்கொள்ளும்.  விவசாயத்துறை உட்பட உற்பத்தி துறைகளும் பாரிய ஆபத்தினை எதிர்கொள்ளும்.

அன்றைய காலத்தில் இந்த தொழிற்சாலைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துவந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது எதிர்ப்பினை கைவிடுவதற்காக தனக்கு ஐந்து கோடி ரூபா தருவதாக குறித்த கம்பனியினால் விலைபேசப்பட்டதாக அன்றைய காலத்தில் பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இந்த தொழிற்சாலையினை நிறுவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்த கல்விமான்கள்,புத்திஜீவிகள் குறித்த கம்பனியினால் வாங்கப்பட்டிருந்தனர். இன்று இந்த தொழிற்சாலையினை இயக்குவதற்கு எந்தவித சிக்கலும் இல்லாத வகையில் அனைவரும்  விலை போய்யுள்ளனர். இவ்வாறான நிலையில் இந்த தொழிற்சாலையின் ஆபத்தினை உணர்ந்து இதனை தடுப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.

Leave a Reply