எப்ஸ்டீன் ஆவணங்கள் – மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், பீட்டர் மண்டெல்சனை (ஒரு வருடத்திற்கு முன்பு) அமெரிக்காவுக்கான பிரிட்டனின் தூதராக நியமித்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார். அதிகாரமிக்க மனிதர்கள் விசாரணைகளில் இருந்து தப்பிக்கும்போது மக்களுக்கு ஏற்படும் கோபத்தை தான் புரிந்து கொள்வதாகவும் ஸ்டாமர் கூறினார்.

கடந்த வாரம், அமெரிக்க நீதித் துறை எப்ஸ்டீன் தொடர்பான கூடுதல் கோப்புகளை வெளியிட்டது, அதில் மண்டெல்சனுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல்களும் அடங்கும். இதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ஸ்டாமரின் கருத்து வெளியாகியுள்ளது.

‘மண்டெல்சனின் கோப்புகளை எவ்வளவு விரைவில் வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிட விரும்புவதாகவும், ஆனால் அது காவல்துறையின் அறிவுரைக்கு எதிரானது என்றும், அது அடுத்தகட்ட விசாரணைகள் அல்லது சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்கலாம்’ என்றும் பிரிட்டன் பிரதமர் தெரிவித்தார்.

இதனால் தான் தனிப்பட்ட முறையில் வருத்தமடைந்துள்ளதாகவும், அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் தடுக்கும் வகையிலான அரசியல் ஆதாயம் தரும் நடவடிக்கைகளைத் தான் எடுக்க மாட்டேன் என்று ஸ்டாமர் கூறினார்.

“எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மில் பெரும்பாலானோர் புரிந்து கொள்ளக் கூட முடியாத ஒரு வலியை அனுபவித்துள்ளனர். மண்டெல்சனின் பொய்களை நம்பி அவரைப் பணியில் அமர்த்தியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்,” என்றார்.

கியர் ஸ்டாமர் 2024 டிசம்பரில் பீட்டர் மண்டெல்சனை அமெரிக்காவுக்கான பிரிட்டனின் தூதராக நியமித்தார்.