பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது ஒரு தேசிய முன்னுரிமையாக அமைய வேண்டும்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் கடந்தவாரம் வழங்கிய தீர்ப்பும் இலங்கையின்  இரு  முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும்  இரு இராணுவ அதிகாரிகள் மீது கனடா அரசாங்கம் விதித்திருக்கும் தடைகளும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது ஒரு தேசிய முன்னுரிமையாக வரவேண்டும் என்பதை உணர்த்துவதாக தேசிய சமாதானப் பேரவை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இது தொடர்பில் பேரவை விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் மனித உரிமை மீறல்களுக்காக கனடிய அரசாங்கம் விதித்திருக்கும் தடைகளும் ஆட்சிமுறையில் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை  தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புத்துறையின் நான்கு உயர்மட்ட உறுப்பினர்களும் தங்களது பொறுப்புக்களை அலட்சியம் செய்ததன் விளைவாக 500 க்கும் அதிகமான குடிமக்கள் உயிரிழக்கவும் காயமடையவும் நேர்ந்தமைக்கு குற்றப்பொறுப்புடையவர்கள் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பொது வாழ்வில் தண்டனையின்மையும் (Impunity) பொறுப்புக்கூறல் இன்மையும் காணப்படுகின்ற சூழ்நிலையி்ன் பின்புலத்தில் இந்த தீர்ப்பு ஒரு மைல் கல்லாகும்.

அரசில் உயர் பதவிகளைப் பெறுவதென்பது தேர்தல்களில் வெற்றிபெற்றவர்களினால் அல்லது அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுடன்  நெருக்கமாக இருப்பவர்களினால் ஒரு வரப்பிரசாதமாகவும் சிறப்புரிமையாகவும் நீண்டகாலமாக  நோக்கப்பட்டுவருகிறது. இலங்கையில் உயர் பதவிகளை வகிப்பதென்பது தேசிய நலன்களுக்காக சேவை செய்வதை விடவும் சுய இலாபம் அடைவதற்கும் நெருக்கமானவர்களுக்கு உதவி செய்வதற்குமான ஒரு வாய்ப்பாகவே நோக்கப்பட்டு வந்திருக்கிறது.

குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து திரும்பத்திரும்ப எச்சரிக்கைகள் செய்யப்பட்டதற்கு மத்தியிலும் குடிமக்களை பாதுகாக்க தவறியமைக்காக உயர் நிறைவேற்று அதிகார மட்டங்களில் இருந்தவர்களில்  சிலரை பொறுப்பாளிகளாக்கி  தேசிய நீதித்துறையின் உயர்பீடம் தீர்ப்பளித்திருப்பதை தேசிய சமாதானப் பேரவை வரவேற்கிறது.

நாட்டையும் மக்களையும் பெரும் இடர்பாட்டுக்குள்ளாக்கியிருக்கும் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் நீதிமன்றங்களின் முன்னால் வேற பல வழக்குகள் இருக்கின்றன. பொருளாதார வீழ்ச்சி அதிகப்பெரும்பான்மையான மக்களின் வாழ்வை அவலத்துக்குள்ளாக்கியிருப்பதுடன் மக்களின் நாற்பது சதவீதமானவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளியிருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதியை பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்படடிருக்கும் இலட்சக்கணக்கான மக்களாலும் பெற்றுக்கொள்ளப்படும் என்று நாம் நம்புகிறோம். தவறான முகாமைத்துவம் மற்றும் மோசடி போன்ற பொருளாதாரக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களும் பொறுப்புக்கூற வைக்கப்படவேண்டும். அவர்கள் தங்கள் குற்றச்செயல்களுக்காக விலையை செலுத்த வைக்கப்படவேண்டும்.

கடந்த காலப் பிரச்சினைகளுக்கான பொறுப்புக்கூறலை கையாளத் தவறியதன் விளைவாகவே மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் நடவடிக்கைகள் வடிவில் சர்வதேச தலையீடுகளுக்கு கதவு திறந்துவிடப்பட்டது.

சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்று கூறி கனடா அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்சவையும் கோட்டாபய ராஜபக்சவையும் மற்றும் இரு இராணுவஊ அதிகாரிகளையும் இலக்குவைத்து கடந்த வாரம் தடைகளை விதித்திருக்கிறது.

மனித உரிமை மீறல்களைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவர்களை தேசிய நீதித்துறைச் செயன்முறைகளின் ஊடாக பொறுப்புக்கூறவைக்க இலங்கை தவறிவிட்டது என்ற அடிப்படையிலேயே கனடா அரசாங்கம் அதன் நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் பொருளாதாரக் குற்றங்கள் மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை  முக்கிய கவனம் செலுத்தியிருக்கிறது.அரசியல் தலைவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் நாட்டின் சொத்துக்களைக் களவாடி உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் இரகசியமாக பதுக்கிவைத்திருப்பதே பொருளாதாரக் குற்றங்கள் எனப்படுகின்றன. இந்த சர்வதேச ஆபத்தை கையாளுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் களவாடப்பட்ட சொத்துக்கள் மீட்புத்திட்டம் ( Stolen Assets Recovery Program – STAR ) ஒன்று இருக்கிறது.

களவாடப்பட்ட சொத்துக்கள் மீட்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டியது அவசியமாகும்.வெறுமையாக இருக்கும் நாட்டின் பணப்பேழையை நிரப்புவதற்கு  முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது அவசியமானதாகும்.

கடந்த ஒரு வருடமாக ஏற்கெனவே கடுமையான அதிர்ச்சிகளுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை மக்களுக்கு கடந்த வாரத்தைய மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த இரு நிகழ்வுகளும் ஒரு அதிர்சியைக் கொடுத்திருக்கும்.இலங்கையின் கட்டமைப்புக்களிலும் மக்களின் உணர்வுகளிலும் பொறுப்புக்கூறல் கோட்பாடு நிறுவனமயப்படக்கூடிய வாய்ப்பை இந்த இரு நிகழ்வுகளும் ஏற்படுத்தும் என்பதே அவற்றில் உள்ள வரவேற்கத்தக்க ஆரோக்கியமான அம்சமாகும்.

உயர் நீதிமன்றத்தினால் வெளிக்காட்டப்பட்ட தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறை சர்வதேச தலையீடுகளை தவிர்ப்பதற்கும் தேசிய செயன்முறைகளை முன்னெடுப்பதற்கும் உதவும். அதிகாரப் பதவிகளைப் பெறுபவர்களும் தேசிய தலைமைத்துவமும் மக்களையும் அவர்களின் மனித உரிமைகளையும் அவமதிக்காமல் இனிமேல் பொறுப்புடன் செயற்படும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.