‘மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துக’ – முன்னாள் எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் பற்றி தற்போது பேசப்படுகிறது. ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடுகளை அவர்கள் தமது விருப்பத்துக்கு அமைய பெருப்பித்துக்கொள்ள அனுமதி வழங்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள விஜேராம இல்லத்தை அவர்கள் அரச செலவில் தமது விருப்பத்துக்கு அமைய புதுப்பித்துள்ளார்கள். நாடு வங்குரோத்து நிலையடைந்த சந்தர்ப்பத்திலும் அந்த வீட்டை புனரமைப்பதற்கு பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆகவே, இது முறையற்றதொரு செயற்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் விடுதலைப் புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என  தெரிவித்துள்ளார்.