மலையக மக்களின் காணி உரிமை பிரச்சினைக்கு தீர்வு வழங்க அவசர கால சட்டத்தை பயன்படுத்த வேண்டும் – மனோகணேசன்

மலையகத்தில் ஏற்பட்டுள்ள பேரவல நிலைமையின் மூலமாவது மலையக மக்களின் காணி உரிமை கோரிக்கைக்கு தீர்வை வழங்க வேண்டும். தற்போது அவசர கால சட்டம் அமுலில் உள்ளதால் அதன்மூலமாவது தேவையான காணிகளை சுவீகரித்து அந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றலாம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற  அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இந்த பேரனர்த்ததில் நாடு முழுவதும் சில மாவட்டங்களை தவிர ஏனைய சகல மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்கள் பாரிய சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு அதிகளவில் மலையக மக்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் பேரவலத்தை சந்தித்தார்கள். மரணங்கள், வீடு இழப்புகளும் இங்கேயே அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த மக்கள் தொடர்பில் விசேட அவதானம் அரசாங்கத்தால் செலுத்தப்பட வேண்டும்.

இந்த மக்களின் காணி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இவர்களுக்கு பாதுகாப்பான காணிகளில் வீடுகள் அமைக்கப்பட வேண்டும். மலை உச்சிகளில் இருந்து இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அந்த மக்கள் நகரங்களையும், கிராமங்களையும் நோக்கி வர வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. அதற்காக அரச அதிகாரிகள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை மீண்டும் தோட்ட வேலைகளுக்கு வருமாறு அழைக்கின்றனர். எங்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வாழ்க்கை தேவை, உயிர்கள் தேவை. ஆனால் தோட்ட நிறுவாகம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மூலம் அந்த மக்களுக்கு போலியான நம்பிக்கையை உருவாக்கி வீடுகளுக்கு திரும்புமாறு கூறுகின்றது. இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் அவசியமாகும்.

இந்த பேரவலத்தின் மூலமாவது நீண்ட காலமாக கோரிவரும் மலையக காணி உரிமை விடயத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கின்றோம். பாதுகாப்பான காணியே அவசியம். அவ்வாறான நிலம் இருந்தாலே அவர்களால் வாழ முடியும். இன்று அவசர கால சட்டம் அமுலில் உள்ளது. அரசாங்கம் தேவையென்றால் காணிகளை சுவீகரிக்க முடியும். அரசாங்கத்திற்கு தேவையான அதிகாரங்கள் உள்ளன. அதன்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.