மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு

மியான்மாரில் எதிர்வரும் டிசம்பரில் பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படும் என்றும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்றும் இராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மியான்மரில் எதிர்வரும் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய அளவில் போட்டியிடவுள்ள 9 கட்சிகள் உள்ளிட்ட மொத்தம் 55 கட்சிகள் தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மின் ஆங் ஹ்லைங் தலைமையிலான மியான்மர் இராணுவ நிர்வாகம், டிசம்பர் மற்றும் ஜனவரியில் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகும் வகையில், நாட்டின் சில பகுதிகளில் அமுலில் இருந்த அவசரகால நிலையை கடந்த மாதம் முடிவுக்கு கொண்டுவந்தது.

2021 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை நீக்கிய பின்னர், மின் ஆங் ஹ்லைங் தலைமையிலான நிர்வாகம் மியான்மரில் அவசரகால நிலையை அமுல்படுத்தியது.

ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் (National League for Democracy) உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது மின் ஆங் ஹ்லைங்கின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு போலியான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளன.

மியன்மாரில் பெரும்பாலான பகுதிகள் ஜனநாயக ஆதரவு போராளிகள் மற்றும் சிறுபான்மை கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மியான்மரில் 2020 நவம்பரில் தேர்தல் நடைபெற்றது. அதில், தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால், அந்த தேர்தலில் பரவலான மோசடிகள் இடம்பெற்றதாக இராணுவம் தெரிவித்து, ஆங் சான் சூகி மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பல தலைவர்களை கைது செய்தது. எனினும், சுதந்திரமான தேர்தல் கண்காணிப்பு குழுக்களான ஆசிய சுதந்திர தேர்தல் வலையமைப்பு (Asian Network for Free Elections) மற்றும் கார்ட்டர் மையம் (Carter Center) ஆகியவை மோசடி குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தேர்தல் முடிவுகள் பொதுமக்களின் தெரிவுடன் ஒத்திருந்ததாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.