ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலக இனமாக அவர்கள் வாழும் உலகநாடுகளிலும் 37வது ஆண்டாக தாயக இறைமை காத்த மாவீரர்களின் வாரத்தினை முன்னெடுத்து, நவம்பர் 26ம் நாள் தேசியத்தலைவனின் தோற்ற நாளையும் மறுநாள் நவம்பர் 27ம் நாள் தாயகத்தின் தேசிய நாளாக மாவீரர் நாளையும் முன்னெடுக்கவுள்ளனர்.
இந்நேரத்தில் “மாவீரரே தொழப்பட வேண்டிய தெய்வங்கள் அவர் தவிர வேறு தொழப்பட வேண்டிய கடவுள் இலவே என வரலாற்றுத் தொடக்கக்காலத்திலேயே புலவர் மாங்குடி கிழார் மூதின் முல்லை துறையில் மாவீரனாக நடுகல் பெற்ற மலைநாட்டுத்தலைவனை ஏத்தித் தொழுத புறநானூற்று 335 வது பாடலை இலக்கு மீள்பதிவு செய்து, மாவீரர் நாள் தமிழ்ப்பண்பாட்டின் மீட்பு நாளாகவும் உலகத் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறது.
அடலருந் துப்பின்…
குரவே தளவே குருந்தே முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை
ஓன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
என்னும் இப்பாடல் “வெல்வதற்கரிய வலிமையைப் பற்றிக் கூறுவதாயின் குரவம், தளவம், குருந்தம், முல்லை என்னும் இந்நான்கும் தவிர வேறு பூ இல்லை. வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கையும் தவிர வேறு உணவு இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய நான்கு குடிகளையன்றி, வேறு சிறப்பான குடிகள் இல்லை. பகைவர் படைகளை முன்னேறிச் செல்ல விடாது தடுத்துப் பெரிய தந்தங்களை உடைய யானையை வீழ்த்தி வெற்றி கொண்டு தாமும் நடுகல் பெற்று மரணத்தை வென்று காலம் ஆகி காலம் உள்ளவரை வாழும் மாவீரர்களைப் பூவும் நெல்லும் சொரிந்து பரவித் தொழுதல் அன்றி வேறு வழிபடும் தெய்வமும் தொழுதற்கு இல்லை” தமிழரின் பண்பாடாக மாவீரரைத் தெய்வமாகப் போற்றும் பண்பாட்டை விளக்குகிறது.
இந்த மாவீரர் போற்றும் நடுகல் வணக்கப் பண்பாடு ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு போன்ற சங்கத்தமிழின் அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் காணப்படுகின்றன. ஆயினும் 1989 இல் தமிழீழ நடைமுறையரசில் தேசியத்தலைவர் அவர்களால் நவம்பர் 27 இல் மாவீரர் நாள் ஈழத்தமிழர்களின் தாயகத்தில் மக்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கும் வளர்ச்சிகளுக்கும் வீரச்சாவடைந்த மாவீரர்களின் மாவீரர்நாள் தாயகத்தின் தேசிய நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னரே உலக வரலாற்றில் மீளவும் மாவீரர்களைப் போற்றும் தமிழ்ப்பண்பாடு காலத்துக்கு ஏற்ப மீள்உற்பத்தி செய்யப்பட்டது என்பது சமகால உலக வரலாறாக உள்ளது. எனவேதான் மாவீரர் நாள் உலகத் தமிழ்ப்பண்பாட்டு மீட்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு ஈழத்தமிழரின் இறைமையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரையான தொடர்ச்சியை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டியுள்ளது என இலக்குக் கருதுகிறது.
அத்துடன் மாவீரர் நாள் வணக்கத்துக்குரிய புனிதமான நாளாகவும் சக்தி தரும் நாளாகவும் உள்ளது என்பதை மேற்கூறிய பாடல் தெளிவாக்கியது. இந்நாள் இறந்தவராக ஒருவரை அறிவித்து விளக்கேற்றும் நாளல்ல, இறந்தவர்களை நினைக்கும் நாளுமல்ல, இத்தகைய நோக்கில் போக்கில் மாவீரர்நாளை அணுக முயற்சிப்பவர்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இலக்கு இதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறது. “மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றவர்கள்” என்ற ஈழத்தமிழர் தேசியக்கவி புதுவை இரத்தினத்துரை அவர்களின் சுருக்கமான கவி வரிகள் மரணத்தை வென்றவர்கள் மாவீர்கள் எனப் பிரகடனப்படுத்திய நிலையில் இறந்தவர் நினைவுநாளாக எவ்வித தடையுமின்றி ஈழத்தமிழர் மாவீரர்நாளைக் கொண்டாட நாமனுமதிக்கின்றோம் என்னும் சிறிலங்கா அரசின் அறிவிப்பு எவ்வளவு தந்திரமாக ஈழத்தமிழர் மாவீரர் வணக்கப்பண்பாட்டை இளையவர்களிடை வரலாற்றுத் திரிபு செய்ய முயற்சிக்கிறது என்பதை இலக்கு இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
ஈழத்தமிழர் தாயகத்தின உண்மைகளின் ஒளியாக, ஈழத்தமிழரின் தேசியத்தை மீளுறுதி செய்யும் வழியாக யாராலும் என்றும் பிரிக்க இயலாத தன்னாட்சியைப் பயன்படுத்தி பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சியும் உள்ள வாழ்வாக ஈழத்தமிழர் தங்கள் வாழ்வை அமைக்கத் தோன்றாத்துணையாகச் சக்தி தரும் மாவீரரை கடவுளின் இருப்பு என்னும் ஒளி வடிவாக மாவீரத் தீபமாக ஏற்றித் தொழும் நாள் இந்நாள்.
இதனாலேயே மாவீரத் தீபம் மாவீரர் நாளில் ஏற்றியதும் தேசமே மாவீரத்தின் ஒளி வெள்ளமாகி எங்கள் பாரம்பரிய தாயகத்தின் (Traditional Home Land) வரலாற்று இறைமையைப் Historical Sovereignty) பாருங்களென அந்த ஒளிவெள்ளத்தால் தாயகத்தின் எல்லைகளின் ஒருமைப்பாட்டையும் (Territorial integrity) உலகுக்கு தெளிவாக்க எடுத்துக்காட்டும். ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையை சனநாயக வழிகளில் ஈட்டப்பட்ட இறைமையாகவும் (Earned Sovereignty) மக்கள் போராட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட இறைமையாகவும் (Remedial Sovereignity) வளர்த்துக் கொண்ட பரிணாமத்தை உணர்த்தும் நாளாகவும் மாவீரர்நாள் உரைகள் அமையும்.
நீதிக்கான ஈழத்தமிழரின் போராட்டங்கள் அவர்கள் என்றுமே எதனாலும் தங்களைச் சரணடைய வைக்க இயலாதென சட்ட பூர்வமாக வெளிப்படுத்தி அறநிலை இறைமையை (Moral Sovereignty) உலகுக்கு உறுதி செய்து வருவதை நினைப்பிக்கும் நாளாகவும் மாவீரர்நாள் உள்ளது. மாவீரர்நாள் ஈழத்தமிழர்கள் இறைமையுள்ள மக்களாகத் தாங்கள் திகழ்வதற்கான எல்லா நிபந்தனைகளையும் மேற்காட்டியவாறு தங்களுக்கு இருப்பதாகத் தெளிவுபடுத்தித் தங்களின் சிவில் வாழ்வை எந்த கட்டாயமும் இல்லாது தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் பாதுகாப்பான அமைதி வாழ்வாகவும் வளர்ச்சிகள் கொண்ட வாழ்வாகவும் தங்களின் தன்னாட்சியின் அடிப்படையில் அமைத்து மற்றைய தேசஇனத்துடனும் குடிகளுடனும் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர வாழ்வை கூட்டமைக்க ஈழத்தமிழர்கள் விரும்புகிறார்களென அவர்களின் சிவில் இறைமையை (Civil Sovereignty) உலகுக்கு உறுதிப்படுத்தும் முக்கிய நாள். சிவில் சமுகங்கள் மேலும் மேலும் கட்டமைக்கப்பட்டு ஈழத்தமிழர் ஒருங்கிணைப்பு தேசமாக எழ இந்நாளில் அனைவரும் சிந்திக்க வேண்டுமென்பது இலக்கின் எண்ணம்.
மேலும் இன்றுள்ள உலக-ஆசிய-இந்தியத்துணைக்கண்ட-அரசியல், சிறிலங்கா அரசச் சூழல் என்பன ஈழத்தமிழர் சிறிலங்கா என்னும் சிங்கள பௌத்த நாட்டுக்குள் வாழ வேண்டிய சமுகம் என்னும் நிலையை ஒருமித்த அரசால் உருவாக்கும் நோக்கும் போக்கும் உடையதாக உள்ளது. இந்நிலையில் 2025ம் ஆண்டின் மாவீரர் நாளின் முக்கியத்துவம் மிகப் பெரிதாக உள்ளது. இதனை ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் மனதிருத்தித் தமக்குள் உள்ள எல்லாப் பேதங்களையும் கடந்து தேசமாக ஒருமைப்பட்டு மாவீரர்நாளில் எழுவதிலேயே தாயகத்திலும் உலகிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.
ஆசிரியர்




