தெற்கின் மக்களுக்கு பொருளாதாரம் சார்ந்தது தமிழ், முஸ்லிம் மக்களுக்கோ அது யுத்தக் குற்றம் சார்ந்தது-அருட்தந்தை மா.சத்திவேல்

தெற்கின் மக்களுக்கு பொருளாதாரம் சார்ந்தது. இன அழிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கோ அது யுத்தக் குற்றம் சார்ந்தது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோட்டா கோ ஹோம் (கோட்டா வீட்டுக்கு செல்) தொனிப்பொருளில் காலிமுகத்திடலில் பத்து நாட்களை கடந்தும் போராட்டம் இரவு பகலாக தொடர்கின்றது இப்போராட்டத்தில் சிங்க கொடியை அசைத்தும், போர்த்துக் கொண்டும் இன,மத சகோதரத்துவம் பேசும் பெரும்பான்மை சமூகத்தார், அதற்கு மத்தியில் அதே சிங்கக் கொடியை கையில் தாங்கிக்கொண்டு நிற்கும் தமிழர்களையும், முஸ்லீம்களையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த சகோதரத்துவம் என்பது பெரும்பான்மை ஏனைய இனங்களை கரைத்துவிடும், அழித்துவிடும் தன்மை கொண்டது என்பதே உண்மை.

காலிமுகத்திடலில் கோட்டா கோ ஹோம் கிராமம் அமைக்கப்பட்டிருக்கும் அதே சூழ்நிலையில் ரணவிரு கம (இராணுவ வீரர்களின் கிராமம்) அமைக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடியும் இராணுவ வீரர் கிராமமும் தமிழ் இன எதிர்ப்பு அடையாளமே. இவை இரண்டிற்கும் மத்தியில் தமிழர்கள் தேசியக் கொடியோடு நிற்பதன் மூலம் எதனை சாதிக்க விரும்புகிறனர்? எதனைக் கூற வருகின்றனர்? இன அழிப்பு வரலாறு தெரியாத இளம் தலைமுறையினர் இன ஒற்றுமை குறித்து பேச தலைப்பட்டுள்ளனர்.

இவர்களே அங்கு தமிழில் தேசிய கீதம் பாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்கு முரண்பட்டும் உள்ளார்.இதுவே காலி முகத்திடலில் உண்மை முகம்.

காலிமுகத்திடலில் கொட்டகை அடித்து தொடர்ச்சியாக போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் ஒரு சில பௌத்த பிக்குகளையும் பெரும்பான்மையின பல்கலைக்கழக மாணவர்களையும் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். அவர்களிடம் வடக்கு கிழக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பு பதாகை மற்றும் கோஷங்களுடன் கலந்து கொள்ள முடியுமா? என நான் கேட்டபோது ஏனைய குழுக்களோடும் கலந்துரையாடிவிட்டு கூறுகின்றோம் என்றனர். இதுவரைக்கும் எந்த பதிலும் கொடுக்கவில்லை. இது காலிமுகத்திடலில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு, நீதிக்கான கோரிக்கைகளுக்கு இடமில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. புதிய தலைமுறையும் இந்த நிலை என்றால் இவர்களால் உருவாக்கப் போவதாக கூறும் புதிய இலங்கையிலும் பழைய முகமே காணப்படும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை எனலாம்.

கோட்டா கோ ஹோம் என்பது தெற்கின் மக்களுக்கு பொருளாதாரம் சார்ந்தது அவருடைய வயிறு சார்ந்தது. இன அழிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கோ அது அரசியல் சார்ந்தது யுத்தக் குற்றம் சார்ந்தது.

அரசுக்கு பணமுடை ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் நாம் வீதிக்கு தள்ளப்பட்டுள்ளோம் என உணர்ந்த போதுதான் கோட்டா கோ ஹோம் கோஷம் எழுந்தது. அது வரை கோட்டா யுத்த வீரனா, சிங்கள பௌத்த காவலன் என்பது இவர்களின் சிந்தனையாக இருந்தது.

ஆனால் தமிழ் மக்கள் கோட்டா கோ ஹோம் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அத்தோடு பதவியில் அமர்வதற்கு துணை நிற்கவும் இல்லை. தமிழர்கள் இவர் போர்க்குற்றவாளி, சர்வதேசமே போர்க்குற்ற விசாரணை நடத்தி சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்படல் வேண்டும் என்றே கூறினர். ஆனால் தெற்கின் சிங்கள பௌத்த மதவாதத்தினால் போதையடைந்தவர்களுக்கு இக் குரல் கேட்கவில்லை. தற்போதும் கேட்பதற்கு ஆயத்தம் இல்லை எனவும் உணரலாம்.

தெற்கில் தற்போது நடைபெறும் போராட்டங்களிலும் போராட்ட வடிவங்களிலும் மட்டுமல்ல அதன் உந்து சக்தியாக உள்ளவர்களிடத்தும் வடகிழக்கில் இதே ராஜபக்சக்கள் நடத்திய அழிவை பார்க்க தவறுகின்றனர். அல்லது பார்க்க மறுக்கின்றனர். இந்நிலை நீடிக்கும் வரை வடக்கும் தெற்கும் இணைய முடியாது. தமிழர்கள் தமது அரசியலுக்காக சிங்கள பௌத்த அரசியல்வாதிகளோடும் அவர்களின் கருத்தியலாளர்களும் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் போராடுவர்.  சம காலத்தில் தெற்கின் போராட்டங்களுக்கு சமமாக எமது போராட்டமும் தொடர்தல் வேண்டும். இது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வலுப்படுத்தும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News