மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார நெருக்கடி | பி.மாணிக்கவாசகம்

 

மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார நெருக்கடி

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக சீரழிந்துள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாத ஓர் இக்கட்டான நிலை. இதனால் நாடுகளிடம் உதவி கோரி கையேந்தி இறைஞ்சுவதே இன்றைய வெளிவிவகாரச் செயற்பாடாக உள்ளது. அயல் நாடுகளிடமும், ஆட்சியாளர்களின் தன்னிச்சைக்கமைய கருதப்பட்ட நேச நாடுகளிடம் கடன் கேட்டுச் சென்ற நிலைமைகள் இன்று மாறிவிட்டது. கண்டவர்களிடம் நிவாரணமாக உதவிகள் கோருகின்ற நிலைமைக்கு ராஜபக்சக்கள் நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அழைப்பை ஏற்று நெருக்கடி நிலைமைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பிரதமராகியுள்ள ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்முகத்தில் வெளியிட்ட கருத்துக்கள் நாட்டின் இந்தக் கையேந்து நிலையைத் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கின்றது.

ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் நாடு பொருளாதாரத்தில் உறுதி பெற்றிருந்தது. மாறி மாறி அதிகாரத்துக்கு வந்த ஆட்சியாளர்கள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தைப் பேணி வளர்ப்பதற்குப் பதிலாக இறக்குமதிப் பொருளாதாரமாக மாற்றி மக்களை சொகுசு வாழ்க்கை வாழப் பழக்கினார்கள். இனப்பிரச்சினைக்கு சமாதான வழிகளில் தீர்வு காண்பதை விடுத்து, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் அடக்க முற்பட்டதன் விளைவாக எழுந்த யுத்தத்தையடுத்து, ராஜபக்சக்கள் நாட்டை கடன்களில் மூழ்கடித்தார்கள்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் நாட்டை தன்னிறைவு கொண்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்த்திச் செல்ல அவர்களால் முடியவில்லை. இனவெறி, மதவெறி போக்கில் இராணுவ மயமான ஆட்சிச் சூழலை உருவாக்குவதிலேயே அவர்கள் தீவிர கவனம் செலுத்தினார்கள். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் தேசிய பாதுகாப்புக்கே நாட்டில் முதலிடம் அளிக்கப்பட்டது. யுத்த காலத்தில் மட்டுமல்லாமல் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான கடந்த 13 வருடங்களிலும் தேசிய பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

சர்வதேச பொருளியல் நிபுணர்களின் ஆய்வறிக்கையின்படி, யுத்தம் முடிவுக்கு வந்த பத்து வருடங்களின் பின்னர் 2019 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு 1.5 பில்லியன் டொலர்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. இது அதற்கு முந்திய வருடத்தில் ஒதுக்கப்பட்ட 2 பில்லியன் டொலர்களிலும் பார்க்க சற்று குறைவானதாகும். ஆனாலும் அடுத்தடுத்த வருடங்களில்; அந்தத் தொகை வீழ்ச்சி பெறவில்லை. நடப்பாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 1.86 பில்லியன் டொலர்கள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. இது முந்திய வருடத்திலும் பார்க்க 14 வீதம் அதிகமானது என்பது கவனத்துக்கு உரியது.

கொரோனா நோய்ப்பேரிடரின் அச்சுறுத்தலுக்கு நாடு ஆளாகியிருந்த வேளை, உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்து, அந்நியச் செலவாணி நெருக்கடியைத் தணிக்க வேண்டிய நிலையில் இவ்வாறு பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிய நாடாகிய இலங்கையின் பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு மிக அதிகமானது என்பதை வெளிவிவகார அமைச்சின் முன்னாள் ஆலோசகர் டேனியல் அல்போன்சஸ் தனது ஆய்வொன்றில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இன்னும் ஒரு யுத்த சூழலில் இருக்கின்றது என்பதையே இது பிரதிபலித்திருக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். அதேவேளை ஆயுதப் படைகளில் அளவுக்கு அதிகமானவர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் ஏனைய தொழில்;களிலும் பார்க்க அதிகக் குறைந்த தொழிலே இங்கு காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிகள் அதிகரிக்கப் பட்டிருக்கின்றன. புதிதாக வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதேவேளை அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைப்பதற்கும், மேலதிக செலவினங்களைக் கட்டுப்படுத்தி இல்லாமற் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அது குறித்து ஆராய்ந்து ஆலோசனைகள் தெரிவிக்கப்படவுமில்லை.

மாறாக அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருந்து பொறுமை இழந்த மக்கள் மீது ரம்புக்கனையில் பொலிசார் பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் பலர் காயமடைந்தனர். ஐந்து பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். படையினருடைய கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் ஆற்றாமையில் தவிக்கின்ற பொதுமக்களின்  அடிப்படை உரிமைகளைப் பாதித்திருக்கின்றன. இந்தச் சம்பவங்களில் நாட்டின் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மட்டும் மீறப்படவில்லை. மனிதாபிமான அடிப்படை உரிமைகளும், இயற்கை வழிவந்த – தீண்ட முடியாத, தீண்டப்படக் கூடாத உரிமைகளும் மீறப்பட்டிருக்கின்றன.

மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு அவசியமான உணவு, எரிபொருள் என்பவற்றை முறையாகவும் தட்டுப்பாடின்றியும் விநியோகிக்க வேண்டியது அரசாங்கத்தின தலையாய கடமை. அந்தக் கடமையில் இருந்து ஆட்சியாளர்கள் தவறியதன் விளைவாகவே பொருட்களுக்கான தட்டுப்பாடு உருவாகியது. உருவாகியது என்பதையும்விட அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது என்றே கூற வேண்டும்.

அரசாங்கத்தின் முன்யோசனையற்ற – தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளே வீடுகளிலும் வேலைத்தலங்களிலும் தமது அன்றாட வாழ்வியல் கடமைகளில் ஈடுபட்டிருக்க வேண்டிய பொதுமக்களை வீதிக்கு இழுத்து வந்து வரிசைகளில் நிறுத்தி இருக்கின்றன. எனவே, பசி, தாகம் என்பவற்றைப் பொறுத்துக் கொண்டு நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கின்ற மக்கள் தாங்களாக விரும்பி வீதிகளில் இறங்கவில்லை. வீணாகவோ அல்லது வேண்டுமென்றோ அவர்கள் உணர்ச்சி வசப்படவுமில்லை. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளைப் பொறுமையோடு சகித்துக் கொண்டிருந்த மக்களே பொறுக்க முடியாத பேரிடர் நிலையில் வரிசைகளில் கொதி நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். எனவே மக்களின் சகிப்புத் தன்மையை சோதிக்கும் வகையில் பொலிசாரும் இராணுவத்தினரும் தமது அதிகாரத்தையும் பலத்தையும் பிரயேரிக்கக் கூடாது. அவ்வாறு அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்திருப்பதன் மூலம், அரசாங்கம் கொடுங்கோலாட்சி நடத்த முற்பட்டிருக்கின்றது என்றே கருத வேண்டி உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசியல் நெருக்கடிக்குத் தாவி இப்போது நாடு மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை முன்னிலை பெறவில்லை. மனிதாபிமானப் பிரச்சினையே வீதிகளில் தலையெடு;த்திருக்கின்றது. மக்கள் எதிர்கொண்டுள்ள மனிதாபிமானப் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அ,ணுக வேண்டியது அவசியம்.

இதனை ஐநாவின் மனிதாபிமான சேவைகளுக்கான அமைப்பு, மனித உரிமை அமைப்புக்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புக்கள் சுட்டிக்காட்டி, பொலிசாரையும் இராணுவத்தினரையும் மிகுந்த நிதானத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். நிலைமைகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறியிருந்தன. ஆனால் அந்த மனிதாபிமான அணுகுமுறை குறித்து அரசாங்கம் கரிசனையுடன் கவனத்திற் கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.

Tamil News