இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி: மேலும் 15 பேர் தமிழகத்தில் தஞ்சம்

யாழ்ப்பாணத்தில் இருந்து மேலும் 15 பேர் கடல் வழியாக தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

தனுஸ்கோடி கரையில் இறக்கிவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இவர்களை,இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குறித்த 15 பேரும் இலங்கையின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இரு கைக்குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட 5 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இவ்வாறு இன்று தனுஸ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

கடந்த மாதத்திலிருந்து 16 குடும்பத்தைச் சேர்ந்த 60 நபர்கள் தனுஷ்கோடி பகுதிக்குத் தஞ்சமடைந்ததை அடுத்து, அவர்கள் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மேலும் 15 பேர் தமிழகத்தில் தஞ்சம் கோரியுள்ளனர்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அன்றாட அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலைகள்  உயர்ந்துள்ளதனால்  மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசுக்கு எதிராக போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News