மெக்சிகோவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.
அங்கு வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 6.5 அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள் முழுவதும் உணரப்பட்டன.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, தென்மேற்கு மாகாணமான குரேரோவில் உள்ள சான் மார்கோஸ் அருகே இருந்தது.
குரேரோ மாகாண ஆளுநர் எவ்லின் சல்காடோ, அந்த மாகாணத்தில் 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகக் கூறினார். மெக்சிகோ நகர மேயர் கிளாரா ப்ருகாடா, 60 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். மேலும் 12 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
நிலநடுக்கத்திற்குப் பிறகும் நில அதிர்வுகள் உணரப்படுவதாக ப்ருகாடா கூறினார்.



