புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை கைது செய்து சிறையிலடைத்துக் கொண்டிருக்கிறது. என்னையே கைது செய்தாலும் எமது அரசியல் பயணத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (4) மஹர சிறைச்சாலையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பார்க்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருக்கின்றார். மறுபுறம் பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பாளர் ஜொஹான் பெர்னாண்டோவும் கைது செய்யப்பட்டிருக்கின்றார். புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜனநாயக அரசியலில் ஈடுபட்டமைக்காக வடக்கு, கிழக்கிலுள்ள தலைவர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளைத் தூண்டிய குழுவினரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த அரசாங்கம் அரசியல் ரீதியில் வங்குரோத்தடையும் போதும், மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்ட போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போன போதும் அவற்றை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
விடுதலைப் புலி புலம்பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக டக்ளஸ் தேவானந்தா பழைய சம்பவமொன்று தொடர்பில் கைது செய்யப்படும் அதேவேளை, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்காக அடக்குமுறைகளையும் அரசாங்கம் பயன்படுத்துகின்றது. என்னை கைது செய்தாலும் எமது பயணத்தை நிறுத்த முடியாது.
அரசாங்கம் மிகக் குறுகிய அரசியல் நோக்கத்துடனேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரதேசசபைத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தான் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலையும் பிற்போடுகின்றது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அச்சப்படுகிறது. அதற்காக தொடர்ந்தும் தேர்தலைக் காலம் தாழ்த்துவதை அனுமதிக்க முடியாது. மக்கள் அவர்களது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.



