இரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்

தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. எதிர்பார்த்த வகையிலும் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன. ஆயினும் இலங்கையின் ஜனநாயக பயணத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வல்லதாகவே இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. நாட்டில் மாறி மாறி ஆட்சி செலுத்தி வந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பழம் பெரும் அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் வரலாற்றிலேயே முதற் தடவையாக நாடாளுமன்றப் பிரவேசத்தை இழந்துள்ளார். இது அவருடைய நான்கு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் விழுந்த மிக மேசாமான அடியாகும்.

தலைவரின் தோல்வி மட்டுமல்லாமல் எந்த ஓர் ஆசனத்தையும் அந்தக் கட்சியினால் பெற முடியாத அளவுக்கு ஐக்கிய தேசிய கட்சியை நாட்டு மக்கள் கைநழுவச் செய்திருக்கின்றார்கள்.

சுதந்திரக் கட்சி ஒரேயொரு ஆசனத்தை மட்டும் தனதாக்கிக் கொண்டுள்ள போதிலும், ஐக்கிய தேசிய கட்சியைப் போலவே, இந்தத் தேர்தலுக்குப் பின்னரான அதன் அரசியல் எதிர்காலம் இருண்டதாகவே காணப்படுகின்றது. இந்த இரண்டு கட்சிகளினதும் படுதோல்வியும், அவற்றுக்குப் பதிலாக அரசியல் அரங்கில் தலைநிமிர்த்தியுள்ள புதிய கட்சிகளாகிய பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளினதும் வருகையானது நாட்டில் தேசிய மட்டத்தில் நிலவி வந்த அரசியல் ஒழுங்கையும், ஆட்சி ஒழுங்கையும் புரட்டிப் போட்டிருக்கின்றது.

புதிய அரசியல் போக்கிற்கு வழி திறந்து விட்டிருக்கின்றது. பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கி அமோக வெற்றியீட்டிய பின்னர், அந்த வெற்றிவாய்ப்பைப் போன்றே பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கின்றது. அந்த வகையில் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் உரிய வகையில் இடம் பிடித்திருந்தது என்றே கூற வேண்டும்.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராசிய சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி, சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தென்னிலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடன் கைகோர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் பதிய அரசியல் கட்சியை உருவாக்கி இருந்தார். இந்தத் தேர்தலுக்காகவே இந்தக் கட்சி புதிதாக உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட அந்தக் கட்சி 47 ஆசனங்களையும் 7 தேசியப்பட்டியல் உறுப்புரிமையையும் தனதாக்கிக் கொண்டுள்ளது. எதிர்க் சட்சியாக மலர்ந்துள்ள அந்தக் கட்சிக்கு இது ஒரு பெரிய வெற்றி என்றே கூற வேண்டும்.sajith இரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்

அதிகூடிய பெறுபேறாகிய 128 ஆசனங்களையும் 17 தேசியப்பட்டியல் உறுப்புரிமையையும் பெற்று 145 நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுஜன பெரமுன தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று, இந்தத் தேர்தலின் ஊடாக புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் போவதாக ராஜபக்ஷக்கள் கூறியிருந்தனர்.

ஆனாலும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு அமைய மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அவர்களால் எட்ட முடியவில்லை. ஆனாலும் அந்த இலக்கை அவர்கள் நெருங்கி இருக்கின்றார்கள். தேர்தலில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட பிரதமரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமாகிய மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தமது கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறும் என்று திடமாகக் கூறினார்.

அவ்வாறு பெறத் தவறினாலும், அந்த அரசியல் பலத்தைத் தங்களால் தேர்தலின் பின்னர் உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் அவர் அடித்துக் கூறி இருந்தார். அதன்படி அரச ஆதரவு கட்சிகளின் உதவியுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பொதுஜன பெரமுன பெற்றுள்ளது. தேசிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றம் ராஜபக்ஷக்களின் புதிய அசரியலமைப்பு உருவாக்கத்திற்கும் 13 மற்றும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்களை இல்லாமல் செய்வதற்கும் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. இது அவர்களைப் பொறுத்தமட்டில் ஓர் அரசியல் சாதனை என்றே கூற வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சூட்டோடு சூடாக பொதுத் தேர்தலை நடத்தி நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மையை உருவாக்க, புதிய நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ செயற்பட்டிருந்தார். ஆனாலும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அவருடைய முயற்சிகள் கொரோன வைரஸ் நோயிடர் நிலைமைகள் காரணமாக நான்கு மாதங்கள் தாமதமாகி இறுதியில் வெற்றிகரமாக பொதுத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த கட்டமாக புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டு ராஜபக்ஷக்களின் அரசியல் கனவுகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அரசாங்கம் ஒன்று வலுவாகச் செயற்படுவதற்குரிய அரசியல் பலம் பல தசாப்தங்களுக்குப் பின்னர் இந்த ஆட்சியாளர்களுக்குக் கிட்டியிருக்கின்றது. இந்த கிடைத்தற்கரிய அரசியல் சந்தர்ப்பத்தை ராஜபக்ஷக்கள் எந்த வகையில் பயன்படுத்தப் போகின்றார்கள் என்ற கேள்வி இருக்கத்தான் செய்கின்றது.

அதேவேளை, சிங்கள பௌத்த தேசியமும் இராணுவ மயமும் கொண்டதோர் ஆட்சிப் போக்கில் முனைப்பைக் கொண்டுள்ள அவர்கள், பல்லினம் மற்றும் பன்மைத்தன்மையைக் கொண்ட தேசிய அரசியல் வழியைப் பின்பற்ற மாட்டார்களா என்று சில தரப்பினர் நப்பாசை கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.
இது ஒரு புறமிருக்க, இந்தத் தேர்தல் வடக்கு கிழக்கில் ஒரு போக்கையும் தென்பகுதியில் ஒரு போக்கையும் கொண்டதாக அமைந்திருந்தது. ஒற்றை ஆட்சி வழிமுறைக்காக தெற்கில் சிங்கள பௌத்த மக்களை இன மத ரீதியாக உசுப்யேற்றி அதன் ஊடாக தேர்தல் வெற்றியை ராஜபக்ஷக்கள் சாத்தியமக்கி உள்ளனர்.Gotabaya Rajapaksa 5 இரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்

மக்களுடைய உண்மையான அரசியல் மற்றும் சமூக வழிகளிலான தேவைகளைப் பூர்த்தி செயற்வதற்கான அரசியல் வழிமுறைகளைப் புறந்தள்ளி, பௌத்த மதத்திற்கும் சிங்கள பௌத்த மக்களுக்கும் இந்த நாட்டை விட்டால் உலகில் வேறு எங்கேயும் இடமில்லை என்ற மாயைக்குள் அவர்களை வீழ்த்திய ராஜபக்ஷக்கள் அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளார்கள்.

தேசப்பற்று நோக்கிலான ஓர் அரசியல் கொள்கை வழியில் நின்று அவர்கள் அரசியல் செய்யவில்லை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவுமில்லை. வெறுமனே ஆட்சி அதிகாரத்தைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு குடும்ப அரசியல் வழிமுறையை உருவாக்கி நிரந்தரமாக்கிவிட வேண்டும் என்ற அடிப்படையிலான சுயலாப அரசியல் வழிமுறையே அவர்களுடைய போக்காக இருக்கின்றது.

ஜனாதிபதியாக 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் கோலோச்சிய மகிந்த ராஜபக்ஷ தோல்வியைத் தழுவி நான்கு வருடங்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தார். மீண்டும் 2019ஆம் ஆண்டு அவருடைய சகோதரர் கோத்தாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவாகியதைத் தொடர்ந்து நாட்டின் பிரதமர் பதவியைத் தனதாக்கிக் கொண்டார். இந்தத் தேர்தலையடுத்து அவரே பிரதமராகப் பதவி வகிக்கப் போகின்றார்.

ஆகவே தென்னிலங்கையில் பேரின மக்கள் மத்தியில் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக மக்களைத் திசை திருப்பி, தமக்கானதோர் அரசியல் வழித்தடத்தில் அவர்கள் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர். அது ஒற்றை ஆட்சியை இறுகப் பற்றியதோர் அரசியல் வழிமுறையாகும். வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் தமிழ்த் தரப்பிலும் மக்கள் மனங்களை வென்றதோர் அரசியல் போக்கைக் காண முடியவில்லை.

தமிழ்த்தேசியம் என்பது பேச்சளவிலான அரசியல் கொள்கையாக இருக்கின்றதேயல்லாமல், அதற்கான செயல்வடிவ அரசியலையும் அரசியல் வழிடத்தடத்தையும் தமிழ் அரசியல் தலைவர்களிடம் காண முடியவில்லை.
விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு இராணுவ ரீதியாக அரச படைகளினால் தோற்கடிக்கப்பட்டு தமிழ்ப்பிரதேசம் இராணுவமயமாக்கப்பட்டிருந்த சூழலிலும் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்டவர்களாகவே திகழ்ந்தனர்.181127 Visuvamadu 4 இரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்

அந்த அரசியல் கொள்கையில் அவர்கள் இறுக்கமாகக் கட்டுண்டிருந்தார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் மறைவையடுத்து தமிழ் அரசியல் தலைமையைப் பொறுப்பேற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், அந்த அரசியல் கட்டமைப்புக்குள் மக்கள் கட்டுண்டிருந்ததைப் போன்று கட்டுண்டிருக்கவில்லை. அந்த வகையில் இறுக்கமான ஒரு கட்டமைப்பாகக் கூட்டமைப்பை அவர்கள் கட்டியெழுப்பவில்லை. கட்டமைக்கவுமில்லை.

மாறாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் அதிருப்தியையும் தனிவழிச் செல்வதற்கான சந்தர்ப்பவாத அரசியல் வழிகளையுமே அவர்கள் உருவாக்கி இருந்தார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் கூட்டமைப்புக்கு வெளியில் செயற்பட்டிருந்த கட்சிகளையும் ஒன்றிணைத்து அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே கட்டமைப்புக்குள் செயற்பட வேண்டும். அரசியல் செய்ய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை. அந்த அபிலாஷையைத் தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் சரியாக இனம் காணத் தவறி விட்டார்கள்.

இனங்கண்டிருந்ததாகக் கூறிய போதிலும், தமிழ் மக்கள் விரும்பிய வழியில் அவர்கள் அரசியல் செய்யவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது வடக்கு கிழக்குப் பிரதேச தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து இலங்கைத் தமிழ் மக்களுக்கும் உரியதோர் அரசியல் சக்தியாகப் பரிணமித்திருக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த அரசியல் கனவை அவர்கள் கொண்டிருநதார்கள்.

ஆனால் கூட்டமைப்பை அதன் தலைமையும் அந்தத் தலைமையின் வழியில் பங்காளிக் கட்சிகளும் தேர்தலுக்கான ஒரு கூட்டு அமைப்பாகவே செயற்படுத்தி வந்தனர்.

மக்களின் அரசியல் கனவை நிறைவேற்ற அவர்கள் முயற்சிக்கவில்லை. கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழரசுக் கட்சியின் கட்சி நலன்களில் அவர்கள் கவனம் செலுத்தினார்களே அல்லாமல் கூட்டமைப்பைத் தனியானதோர் அரசியல் இயக்கமாகக் கட்டமைத்து உருவாக்கத் தவறிவிட்டார்கள். உரிமை அரசியலுக்காக உடனடித் தேவைகளுடனும் அன்றாடப் பிரச்சினைகளுடனும் தமிழ் மக்கள் வாழப் பழகிக் கொண்டார்கள்.

ஆனால் அவர்களுடைய கொள்கைப் பிடிப்பை ஓர் அரசியல் பலமாக மாற்றி அமைக்கவும் அதன் வழியில் பிரச்சினைகளைக் கையாளவும் கூட்டமைப்பினர் தவறி விட்டார்கள். இந்தத் தவறினால் ஏற்பட்ட விளைவையே கடந்த தேர்தலிலும் இந்தப் பொதுத் தேர்தலிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அனுபவித்திருக்கின்றது.

இருபது இருபத்திரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நாட்டின் மூன்றாவது சக்தியாகத் திகழ்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெயரளவில் கூட்டமைப்பாகவும், உண்மையில் தமிழரசுக் கட்சியாகவுமே இரட்டை முகத்துடன் செயற்பட்டு வந்தது. இந்த இரட்டைமுகப் போக்கு நாளடைவில் அதன் நாடாளுமன்ற பிரதிநித்துவ பலம் படிப்படியாகக் குறைந்து இம்முறை பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் குறுகி இருக்கின்றது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் செயலாளரைப் புறந்தள்ளி புதிய முகங்களுக்கு மக்கள் இம்முறை இடமளித்திருக்கின்றார்கள். கடந்த தேர்தலிலும் புது முகங்களுக்கு மக்கள் இடமளித்திருந்த போதிலும், அவர்களில் சிலரை இம்முறை புறந்தள்ளி இருப்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஈபிடிபி கட்சிக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை மக்கள் வழங்கி உள்ளார்கள். இங்கு மக்கள் பிரதிநிதிகளாக இருந்த சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன், தேசியப் பட்டியலில் பிரதிநித்துவம் பெற்றிருந்த சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரை அவர்கள் வெற்றி பெறச் செய்யவில்லை. யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளனர்.TNA052013 இரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்

கிழக்கு மாகாணத்திலும் இத்தகைய தோல்வியே ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாணத்தில் மாத்திரம் 9 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. ஆனால் இம்முறை வடக்கு கிழக்கு இரண்டு மாகாணங்களிலுமே 9உறுப்பினர்களே கூட்டமைப்பில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்த வெற்றி ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்பினரைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்தத் தேர்தலில் மக்கள் தமிழ்க் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் பல வழிகளில் எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள். தங்களுடைய அபிலாஷைகளையும் தேவைகள், பிரச்சினைகளையும் கவனத்திற் கொள்பவர்களுக்கே இடமளிக்கப்படும் என்ற ஒரு முக்கியமான பாடத்தைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

கூட்டமைப்புக்கு வெளியில் பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருப்பதன் மூலம் கட்சியிலும் பார்க்க தங்களுடைய கஸ்ட நஸ்டங்களில் பங்கெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தாங்கள் வாக்களிக்கத் தயங்கப் போவதில்லை என்ற கசப்பான செய்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

தமிழ்த் தலைவர்கள் மக்களின் மனங்களை அறிந்தவர்களாக அவர்களுடைய நம்பிக்கையை அரசியல் ரீதியாக வெற்றி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதன் அவசியமும் இந்தத் தேர்தல் வாக்களிப்பின் மூலம் மக்கள் புலப்படுத்தி உள்ளார்கள். ஏட்டளவிலும் பேச்சளவிலுமான தமிழ்த்தேசியம் நடைமுறைக்கு ஒத்துவர மாட்டாது என்ற பாடத்தையும் அவர்கள் புகட்டி உள்ளார்கள்.

எது எப்படியானாலும், இந்தத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு மிகத் தெளிவானது. அந்தத் தீர்ப்பில் வெளிப்படையாக அடங்கியுள்ள விடயங்களையும் மறைமுகமாக உள்ள விடயங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தங்களுடைய அரசியல் செயற்பாடுகளை சுய பரிசோதனைக்கும், சுயவிமர்சனத்துக்கும் உள்ளாக்கி மக்களின் மனங்களை வென்றெடுக்கத்தக்க வகையில் செயற்பட வேண்டியது அவசியம்.

கட்சி அரசியலைக் கடந்து மக்கள் நலன்களை முதன்மைப்படுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பவர்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்வர்களும் இணைந்து முன்வர வேண்டும். செய்வார்களா?