ராஜபக்ஷக்களாலேயே ரணிலுக்கு ஆபத்து – எச்சரிக்கின்றாா் டிலான் பெரேரா

dilan perera ராஜபக்ஷக்களாலேயே ரணிலுக்கு ஆபத்து - எச்சரிக்கின்றாா் டிலான் பெரேராநாட்டில் 40 வீதமான வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்காதிருக்கும் தீர்மானத்திலேயே இருக்கின்றனர் என்று சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “மொட்டுக் கட்சிக்கு கிடைத்த 69 இலட்சம் வாக்குகளில் குறிப்பிட்டளவு தேசிய மக்கள் சக்தி பக்கம் போயுள்ளது. இன்னுமொரு பகுதி ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் வரும். எனினும் மொட்டுக் கட்சிக்கு கடந்த முறை வாக்களித்தவர்களில் 30 வீதமானவர்கள் உள்ளிட்ட 40 வீதமானவர்கள் எவருக்கும் வாக்களிக்கும் தீர்மானமின்றி இருக்கின்றனர். 60 வீதமான வாக்குகளை கொண்டே ஆய்வு நடக்கின்றது” என்றும் சுட்டிக்காட்டினாா்.

தொடா்ந்தும் கருத்து வெளியிட்ட டிலான் பெரேரா, “எவ்வறாயினும் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லிம்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் ராஜபக்ஷக்கள் இருக்கும் வரையில் அவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி பக்கமே இருக்கின்றனர் என்றே நினைக்கின்றேன். ரணில் விக்கிரமசிங்க, அவர்களைத் தனது பக்கம் இழுக்க எவ்வளவு முயன்றாலும் ராஜபக்ஷக்கள் அவருடன் இருக்கும் வரையில் அந்தப் பக்கம் போகமாட்டார்கள்” என்று தெரிவித்தாா்.

“இதனால் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் அதில் வெற்றிப்பெறுபவர் பொதுத் தேர்தலில் பலமான அரசாங்கத்தை அமைக்கத் தேவையான வாக்குகளை பெறலாம். இதேவேளை இப்போது சஜித் பிரேமதாசவே முன்னிலையில் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

ரணில் இப்போது நெருக்கடியான நிலையில் இருக்கின்றார். மொட்டில் இருந்தால் தமிழ், முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்கு முக்கியமென நினைத்தால் மொட்டின் வாக்குகள் கிடைக்காது போகும். இவ்வாறான நெருக்கடியில் அவர் இருக்கின்றார்” என்றும் டிலான் பெரேரா தெரிவித்தாா்.