சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு உச்சம் – அதிகாரத்தை கைப்பற்ற இரு முனை போட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், மைத்திரி தரப்பும் பதில் தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளது. அத்துடன், சுதந்திரக்கட்சியின் தலைமையகத்துக்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற மைத்திரி தரப்பு மேலதிகமாக பூட்டொன்றை போட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் தவிசாளராக செயற்படுவதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அக்கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் சு.க. குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் அவர்கள் ஒன்றுகூடி பதில் தவிசாளராக நிமல் சிறிபாலடி சில்வாவையும், தேசிய அமைப்பாளராக துமிந்த திஸாநாயக்கவையும் நியமித்துள்ளனர். இக்கூட்டத்தில் சந்திரிகா அம்மையாரும் பங்குபற்றி இருந்தார்.

இந்நிலையில் அரசியலமைப்பு சபையைக் கூட்டி பதில் தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கு மைத்திரி தரப்பும் முயற்சித்து வருகின்றது. இவ்வாறு கட்சிக்குள் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் வெளிநாடு பயணமாகியுள்மை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.