சீர்குலையும் கல்வி நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகுறியாகும் மாணவர்கள் எதிர்காலமும் | வேலம்புராசன் விதுஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

”ஒருமைக் கண் தான் கற்ற கல்வி உருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து”

எனும் திருவள்ளுவரின் கருத்தின்படி ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது ஒருவருக்கு தொடர்ந்து ஏழு பிறப்புகளிலும் அவனை பாதுகாக்கும் சிறப்புடையது. இத்தகைய சிறப்புடைய கல்வியானது இன்று பல சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வில் பாரிய பிரச்சினையாக உருப்பெற்று வருகின்றது. இன்று இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சிக்கலானது சமூகத்தில் சகல சமூக நிறுவனங்களிலும் சகல பிரிவினரிடமும் பாதிப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற அதே வேளை எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.

உலகினை மாற்றும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி
– நெல்சன் மண்டேலா –

இலங்கையில் ஆரம்ப காலங்களில் இருந்த குருகுல கல்வி முறை போர்த்துக்கேயருடைய காலத்தில் தம் மதத்தினையும் மொழியினையும் பரப்புவதற்கு கத்தோலிக்க மதத்தினூடாக கல்வி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர் காலத்தில் கட்டாயக் கல்விமுறையை கொண்டுவந்திருந்ததுடன் அதனை அடிப்படையாகக் கொண்டு தமது மதத்தை விஸ்தரிப்பு செய்தனர். இதன்போது 15 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்விமுறை கொண்டுவரப்பட்டது. இவ்வாறாக இலங்கை கல்விமுறையானது வளர்ச்சிகண்டிருந்ததுடன் சுதந்திரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் பலதரப்பட்ட மாற்றங்களை தன்னுள் ஏற்படுத்தி இருந்தது. இன்று பல நவீன மாற்றங்களை பெற்று மாணவர்களின் எண்ணங்கள் ஆற்றல்களை வளர்த்து சிறந்த எதிர்கால தலைமுறையை உருவாக்கும் வகையில் மாற்றமடைந்துள்ளது.

இருப்பினும் இன்றைய காலத்தில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது மாணவர்களின் கல்வியை தடுமாற்றமடையச் செய்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. பிள்ளைகளின் ஆரம்பநிலை சமூகமயமாக்கல் நிறுவனமாக பாடசாலைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளே சமூகத்திற்கு ஏற்ப மாணவர்களை சிறந்த சமூகமயமாக்கலுக்கு உட்படுத்து எதிர்கால தலைமுறையினரை சிறந்த முறையில் வடிவமைக்கின்றது. இருப்பினும் இன்றய இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பல மாணவர்களினால் பாடசாலைக்கு சென்றுவரமுடியாத இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.

மாணவர்களுக்கான  கல்வியை சிறந்த முறையில் வழங்குவதனை அடியாகக் கொண்டு மாணவர்களை தாம் வசிக்கும் பிரதேசங்களுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் இணைந்து கல்வி பெறுவதற்கான அனுமதியை அரசு வழங்கியிருக்கின்ற போதிலும் எத்தனை சதவிகித மாணவர்களினால் இவ்வாறு தமது கல்விநடவடிக்கைகளினை முன்னெடுக்கமுடிகின்றது என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை கல்வி கற்கின்ற போது அப் பிள்ளைக்காக செலவிடுகின்ற பணம், நேரம் என்பவற்றை விட இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் கல்வி கற்கின்ற குடும்பங்களில் அதிகளவு பணம், நேரம் என்பனவற்றை செலவிட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இருப்பினும் இன்றைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பெற்றோர்களினால் தமது பிள்ளைகளுக்கான கல்வியை பெற்றுக்கொபெற்றுக்கொடுப்பது சிக்கலான ஒன்றாகவே காணப்படுகின்றது.

ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியை சிறந்த முறையில் பெற்று உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மாணவர்கள் கூட தமக்கான வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வரிசையில் காத்திருக்கின்ற நிலையில் இன்றைய பொருளாதார நிலையில் தமது கல்வியை தொலைத்துக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. தமது அத்தியாவசிய தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கின்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்களை விட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒவ்வொரு நாழும் தினக்கூலி வேலைக்கு செல்லவேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவு பாதிப்புக்களினை எதிர்கொள்கின்ற நிலை காணப்படுகின்றது.

அதே போன்று இன்றைய பொருளாதார நெருக்கீட்டில் இருந்து வெளிவரும் முகமாக அரச பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெறுவதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்ற நிலையில் அதிகளவான ஆசிரியர்கள் இதற்கான விண்ணப்பங்களை வழங்குகின்ற நிலை காணப்படுகின்றது. இதனால் பெருமளவில் மாணவர்களே பாதிப்பினை எதிர்கொள்கின்றனர். மாணவர்களுக்கான சிறந்த கல்வி அறிவினை புகட்டி அவர்களுக்கு சமூகத்திற்கு ஏற்ப சமூகமயமாக்கலினை வழங்கும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்ற போது இன்று கல்விகற்று வருகின்ற எதிர்கால இளம் தலைமுறையினர்களின் நிலை என்னவாகும்.