06. கனடா போன்ற நாடுகளில் வாழும் இலங்கையின் புலம்பெயர் சமூகத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் பங்களிக்கக்கூடிய மிகப்பெரிய பலமாகவும், மாபெரும் சாத்தியக்கூறாகவும் விளங்குகின்றனர் என்று முன்னாள் நிதித்துறை இராஜாங்க அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தற்போதைய தலைவருமான எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கொழும்பில் நடைபெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இலங்கை கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் அதிகாரிகள் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்
“இலங்கையின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, உலகிலேயே மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் சமூகத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக எமது நாடு திகழ்கிறது.
பலர் இதனை ஒரு எதிர்மறையான விஷயமாக மாத்திரமே பார்க்கிறார்கள்.
ஆனால், நான் இதனை இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறாகவும் பலமாகவுமே பார்க்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த புலம்பெயர் சமூகத்தினர் அதிக கல்வி அறிவுடையவர்களாகவும், முதலீட்டுத் திறனைக் கொண்டவர்களாகவும் விளங்குகிறார்கள்.
ஆனால், கனடா போன்ற நாடுகளில் பிறந்து வளர்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் தலைமுறையினர் தனிப்பட்ட ரீதியில் இலங்கை மண்ணோடு தொடர்பில்லாவிட்டாலும், அவர்கள் வாழும் வெளிநாட்டுச் சமூகங்களிலும் வர்த்தகக் கட்டமைப்புகளிலும் மிக உயர்ந்த நிலைகளை எட்டியுள்ளனர்.
எனவே, அவர்கள் நினைத்தால் பெரிய வர்த்தக வலைப்பின்னல்களையும், புதிய முதலீடுகளையும், நவீன தொழில்நுட்ப மாற்றங்களையும் இலங்கைக்கு மிக எளிதாகக் கொண்டுவர முடியும்
அந்த வகையில் புலம்பெயர் சமூகத்தினர் இந்த நாட்டுக்கு மிக அவசியமானவர்கள் என்றும் அவர்களை எப்போதும் இருகரம் கூப்பி வரவேற்க வேண்டும் என்றும் முன்னாள் நிதித்துறை இராஜாங்க அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தற்போதைய தலைவருமான எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
“அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதுடன், வெளிநாடுகளில் பிறந்துள்ள அவர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினருக்கு நிரந்தர வதிவிட உரிமைகளை வழங்க நாம் முன்வர வேண்டும்.
இதன் மூலமே அவர்களுக்கும் இந்த நாட்டிற்குமான தொப்புள்கொடி உறவை உறுதிப்படுத்த முடியும்” என்று முன்னாள் நிதித்துறை இராஜாங்க அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தற்போதைய தலைவருமான எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.



