அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் (USARPAC) பிரதி கட்டளைத் தளபதியான லெப்டினன் ஜெனரல் ஜொயெல் “ஜேபி” வவல், நேற்று (29) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவரது பயணம், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ச்சியடைந்து வரும் இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
“லெப்டினன் ஜெனரல் வவலின் இந்த பயணம், இலங்கையுடனான எமது பாதுகாப்புப் பங்காண்மையின் வளர்ந்து வரும் வலிமையையும், நடைமுறை ரீதியான பெறுபேறுகளை அடைவதற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒன்றிணைந்த பயிற்சிகள், ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளின் போது பதிலளிக்கும் ஆற்றலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், இரு நாடுகளும் மக்களைப் பாதுகாப்பதற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் தயார்நிலையை பேணி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



