அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அகதிகளை மீள்குடியமர்த்துவதில் தாமதம்

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் மீள்குடியமர்த்தும் ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 அகதிகள் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், வரும் ஜூன் 30யுடன் முடிவடைய இருக்கும் ஓராண்டில் வெறும் 31 அகதிகள் மட்டுமே நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்பட்டிருப்பதற்கான சூழல் நிலவுகிறது. 

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று அவுஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்ட அகதிகளில் 450 பேரை மூன்றாண்டுகளில் (ஒரு ஆண்டுக்கு 150 அகதிகள் வீதம்) நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுதாகி இருந்தது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு நிறைவடைய இருக்கும் சூழலில், அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதத்தை பார்க்க முடிகிறது.

“முதல் ஆண்டு ஜூன் 30யுடன் முடிவடைகிறது. ஆனால் 150 பேரை (அகதிகளை) நாங்கள் அழைத்து வர வில்லை. ஏனெனில் இதற்கான பணியை சமீபத்தில் தான் ஆரம்பித்தோம். ஆனால் மூன்றாண்டுகளில் 450 பேரை (அகதிகளை) அழைத்து வந்து விடுவோம்,” என நியூசிலாந்து குடிவரவு துறையின் தலைமை அதிகாரியான அலிசன் மெக் டொனால்ட்.

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகளை நியூசிலாந்துக்கு கொண்டு வருவதற்காக எங்களது குழுவினர் கடுமையான பணியாற்றி வருகின்றனர் என நியூசிலாந்து குடிவரவு துறையின் அகதிகள், குடியேறிகள் சேவைகளுக்கான தற்போதைய பொது மேலாளர் ஆண்ட்ரூ லாக்ஹர்ட் தெரிவித்திருக்கிறார். ஆனால், இப்பணி மிகவும் தாமதமாக நடந்து வருவதாக அவுஸ்திரேலியாவில் இயங்கும் Refugee Action Coalition, Amnesty International ஆகிய இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

“ஏன் இந்த தாமதம் அகதிகளுக்கே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது,” என Refugee Action Coalition பேச்சாளர் ஐன் ரிண்டோல் தெரிவித்திருக்கிறார்.

தற்போது நவுருத்தீவில் உள்ள அகதிகள், முன்பு மனுஸ்தீவிலிருந்த அல்லது நவுருத்தீவிலிருந்த அகதிகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே சமயம், தற்போது பப்பு நியூ கினியாவில் அவுஸ்திரேலியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 அகதிகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.