நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில் ஒரே கட்சியாக இயங்க தீர்மானம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய இரு கட்சிகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திப் பணிகள் போன்றவற்றில் ஒரே கட்சியைப் போல இணைந்து இயங்குவதற்குத் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி சபைகளில் எங்களது இரண்டு கட்சிகளுடைய உறுப்பினர்களும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆராய்ந்தோம். அதன் பலனாக, இரு கட்சிகளின் உள்ளூராட்சித் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

விசேடமாக, உள்ளூராட்சி சபைகளில் நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி வேலைகள் போன்ற விடயங்களில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரே கட்சியைப் போல இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு தரப்பாலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இதற்கு மேலதிகமாக, அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய சட்டம் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடினோம். இவை இரண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டுக்கொண்டுவரப்படும் சட்டங்களாகக் காணப்படுகின்றன.

இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இல்லாத பல கடுமையான விடயங்கள் இந்த இரண்டு சட்டங்கள் மூலமாகவும் கொண்டுவரப்படுகின்றன.

உதாரணமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பொலிஸாரிடம் வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் அது நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்ட மூலத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருந்த மோசமான அனைத்து ஏற்பாடுகளும் இந்த இரண்டு சட்டங்களுக்குள்ளும் அடங்குகின்றன. அதுமட்டுமன்றி, அதைவிடக் கூடுதலான அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சரத்துகளும் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த புதிய சட்ட மூலங்களுக்கு எதிராக இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கும் நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதுகுறித்த விரிவான தகவல்களை எங்களது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்” என அவர் குறிப்பிட்டார்.