காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் விவகாரம்- சபையில் சிறீதரன் கேள்வி

472 Views

மரணச் சான்றிதழ்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், ஓமந்தையில் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ் வழங்குவது என்பது அவர்கள் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்பதையா எடுத்துக் காட்டுகிறது? சபையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்து அதில் தமிழ் கைதிகள் மரணித்திருப்பார்களாயின், லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியிருப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நின்றிருந்தவர்களை, இராணுவ சிப்பாய் ஒருவர் 1985ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுத்யுதள்ளினார். அதில் 10 பேர் மரணித்தனர். அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பின்னர் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தனர்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயும், அவரது சகாக்களும் துப்பாக்கியை காண்பித்து தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியிருந்தனர்.

தங்களுடைய சப்பாத்துக்களை நக்கி சுத்தம் செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

துப்பாக்கி அல்லது வெடி பொருட்களை சாதாரண ஒருவர் வைத்திருந்து கைது செய்யப்பட்டிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், லொஹான் ரத்வத்தேயின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால், அதில் தமிழ் கைதிகள் மரணித்திருப்பார்களாயின், லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியிருப்பார்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் காலம் காலமாக தொடர்ச்சியாக வன்முறை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லொஹான் ரத்வத்த அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து சுட்டு கொள்வேன் என துப்பாக்கியால் விரட்டிய செயற்பாடு அரசின் எதேச்சதிகார செயற்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் மிலேச்சத்தனமான செயற்பாடு இந்த நாட்டின் சட்டத்தையும் நீதியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர், கொழும்பிலிருந்து அனுராதபுரத்துக்கு ஹெலியில் பயணித்து, தனது நண்பர் குழாமுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்ததோடு, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை மிலேச்சத்தனமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளமை கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

இச் செயற்பாடானது, இந்த நாட்டின் சட்டம், நீதி, இனநல்லிணக்கம் என்பவற்றை கேள்விக்குட்படுத்துவதோடு, கடந்த காலங்களில் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அப்பாவித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புச் சம்பவங்களை மீள நினைவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.

1983 ஆம் ஆண்டு கொழும்பின் உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையான வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்து 53 தமிழ் அரசியல் கைதிகள், சக சிங்களக் கைதிகளால் குத்தியும், வெட்டியும் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

2000.10.25 ஆம் திகதியன்று மத்திய மாகாணத்தின் பிந்துனுவேவா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் காடையர் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

2012.07.04 ஆம் திகதி வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளான நிமலரூபன், டில்றுக்சன் ஆகிய இரு தமிழ் அரசியல் கைதிகளும் சிறைச்சாலைப் பொலிசாராலும், இராவத்தினராலும் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான சிறைச்சாலைப் படுகொலைகள் அனைத்தும் தமிழ் அரசியல் கைதிகளை இலக்குவைத்து தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளிடம் மிக மோசமான அதிகாரத் தொனியோடு, இனவாதத்தைக் கக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளமை, தமிழ் அரசியற் கைதிகளின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

லொஹானின் இராஜினாமா வெறும் கண்துடைப்பு. ஆகையால் அவரிடமிருக்கும் சகல பதவிகளையும் அபகரித்து, அவரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி மக்களை படுகொலை செய்த மையானது ஒரு இன அழிப்பின் அதியுச்ச செயற்பாடாகும்” என்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply