மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சூழ்ந்து நிற்கும் ஆபத்து – மட்டு.நகரான்

தமிழர்களின் இழப்புகளும், தியாகங்களும் வீண்போய் விடுமோ என்ற அச்சம் தினமும் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. தமிழர்களின் தியாங்களும், இழப்புகளும் வெறுமனே வீதிக்காகவும், சோத்துக்காகவும் நடத்த ப்படவில்லை. தமிழர் தாயகத்தினை பாதுகாப்பதற்கும், தமிழர்கள் உரிமையுடன் வாழ்வதற்கும் நடத்தப்பட்ட போராட்டமாகும். இந்தப் போராட்டத்தின் தியாகங்கள் மறக்கப்படுவதன் காரணமாகவே இன்று வடகிழக்கில் தமிழர்கள் மத்தியில் பல்வேறு வகையான பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன.

வடகிழக்கில் தமிழர் தாயகப் பகுதிகள் சூறையாடப் படுகின்றன என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். திட்டமிட்ட வகையில் காணிகள் அபகரிக்கப் பட்டு,  தமிழர்களின் இன விகிதாசாரத்தினை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் நடை பெறுகின்றன.

குறிப்பாக தமிழர் தாயகத்தின் இதயமாகக் கருதப்படும் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணி அபகரிப்பானது, அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப் படுகின்றது.

பல தடவைகள் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்புப் தொடர்பாக பல்வேறு விடயங்களை நாங்கள் எழுதியுள்ள போதிலும், தொடர்ச்சியான அத்து மீறல் செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டே வருகின்றன.

எதிர் வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டம் எதிர் கொள்ளப் போகும் பாரிய அளவிலான அத்து மீறல்களிலிருந்து மாவட்டத்தினைப் பாதுகாப்பதற்கான வியூகங்களை தமிழ்த் தேசியம் சார்ந்தவர்கள் அமைப்பதற்கு முன்வர வேண்டும். நீண்ட காலத் திட்டமாக சிங்கள தேசம் முன்னெடுத்து வரும் பாரியளவிலான சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதற்கு தற்போதிருந்தே முன் நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் மயிலத்தமடு, மாதவனை, கச்சக் கோடி சுவாமி மலையில் மேய்ச்சல் தரைக் காணிகள் அபகரிப்பு, கரையோரப் பகுதிகளில் முன்னெடுக்கப் படும் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் எழுதியிருந்தேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் வளமிக்க காணிகள் அபகரிக்கப் படுகின்றது என்பதை சொல்லி யிருந்தேன். இவை திட்டமிட்ட குடியேற்றத்திற்கான நடவடிக்கையென சுட்டிக் காட்டி யிருந்தேன்.

இந்த நடவடிக்கைகள் மிகவும் கச்சிதமான முறையில், திட்டமிட்டு, சிங்கள தேசத்தினால் முன்னெடுக்கப் படுவதான செயற்பாடுகள் குறித்த பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக இலங்கையில் உள்ள வளங்களில் மூன்றில் இரண்டு வளங்கள் வடகிழக்கு பகுதியில் குவிந்து கிடப்பதாக அண்மையில் சிங்கள அமைச்சர் ஒருவர் சொல்லியிருந்தார். இதே போன்று அண்மையில் மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கிழக்கு மாகாணம் அதிக வளங்கள் கொண்ட பகுதி என்பதைக் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறானால் இப்பகுதிகளை இலக்கு வைத்து தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு சிங்கள தேசம் தயாராகி விட்டதாகவே கருதப் படுகின்றது.

அண்மையில் வவுணதீவு, பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் அறிவதற்காக ஒரு கள விஜயத்தினை முன் னெடுத்திருந்தேன். இந்த நிலையில் பாவற் கொடிச்சேனை ஊடாக உன்னிச்சைக் குளம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது திடீரென சிறிய விகாரை ஒன்றினையும், பாரிய வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப் படுவதையும் காண முடிந்தது.

IMG 20210627 WA0095 மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சூழ்ந்து நிற்கும் ஆபத்து - மட்டு.நகரான்வவுணதீவு, பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சிப்பிமடுப் பகுதியிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதைக் காண முடிந்தது. குறித்த பகுதியில் 2018ஆம் ஆண்டு விமானப்படையினரால் சேனைப் பயிர்ச் செய்கைக்காக 1500 ஏக்கர் நிலப் பரப்பினை பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப் பட்ட போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டிய எதிர்ப்புக் காரணமாக அந்த நடவ டிக்கைகள் தற்காலிகமாகப் பிற்போடப் பட்டிருந்தன.

சிப்பிமடு பகுதி உன்னிச்சைக் குளத்தினை அண்டிய பகுதியாகவுள்ள அதே நேரம், அனைத்து வளங்களும் கொண்ட பகுதியாகவும் காணப் படுகின்றது. இப் பகுதியில் 1983ஆம் ஆண்டுக்கு முன்பாக சில சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப் பட்டிருந்த போதிலும், 83இற்கும் பின்பாக அக்குடும்பங்கள் மஹாஓயா பகுதியில் வேறு காணிகள் வழங்கப்பட்டு அங்கு குடியேற்றப்பட்டு விட்டனர். எனினும் சிப்பிமடுப் பகுதியில் மீண்டும் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன. அப்பகுதியில் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 20இற்கும் குறைவான குடும்பங்கள் குடியேற்றப் பட்டிருந்ததாகவும் ஆனால் இன்று அப் பகுதியில் பாரியளவிலான குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இருந்தார்கள் என்ற ரீதியில் இந்தப் பாரிய குடியேற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப் படுகின்றன. ஏற்கனவே இருந்தவர்களுக்கு வேறு இடத்தில் காணிகள் வழங்கப்பட்டுக் குடியமர்த்தப் பட்டுள்ள நிலையில், மீண்டும் அங்குள்ளவர் களுக்குக் காணிகளை இங்கு வழங்குவதற்கான நடவடிக்கையினை ஏன் முன்னெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பபப் படுகின்றது.

யுதத்திற்கு முன்பாக அநுராதபுரம் உட்பட இலங்கையின் பல பாகங்களில் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்தார்கள். பின்னர் இடம் பெயர்ந்து வடகிழக்கு மற்றும் மலை யகப் பகுதிகளுக்குச் சென்று விட்டார்கள். ஆனால் அங்கு வாழும் யாரும் சென்று அனுராதபுர காட்டையோ வேறு பகுதிகளில் உள்ள காட்டையோ அழித்துக் குடியேற்றம் செய்ய முற்படவில்லை. ஆனால் வட கிழக்கில் மட்டும் 50 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்ததாகவும், 100 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்ததாகவும் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரப் பகுதிகள் ஒரு சுற்று வளைவாகவும், படுவான் கரையின் பகுதியை சுற்றியதாகவும் சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக் கப்படுகின்றன. சிப்பிமடுப் பகுதியில் பாரிய வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன. படுவான் கரைப் பகுதியில் பல வீதிகள் பல வருடங்களாக புனரமைப்புச் செய்யப் படாமலிருக்கும் நிலையில், சிப்பிமடுவில் பாரிய பாலங்களுடன் குறித்த வீதி புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. இந்த வீதியானது காடுகள் ஊடாக ஊடறுத்து, தாந்தா மலையூடாக அம்பாறை மாவட்டத்தினை இணைக்கும் வகையில் முன்னெடுத்து வரப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வளவு தரமான வீதி புனரமைப்புப் பணிகள் எங்கும் முன்னெடுக்கப் படாத நிலையில், இந்த சிப்பிமடு க்கான வீதி புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன.

அத்துடன் ஏற்கனவே மாதவனை, மயிலத்தமடுப் பகுதிகளில் மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் போராடிக் கொண்டிருக்கும் போது, குடும்பி மலைக்கு பின்புற மாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள், பொலநறுவை மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு முந்திரிகை செய்கை, மரம் வளர்த்தல் திட்டத்தின் கீழ் ஐந்து ஏக்கர் வீதம் வழங்கப் பட்டு வருவதாக குடும்பி மலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

அங்கு உள்ளவர்கள் காடுகளை அழிப்பதன் காரணமாக அங்குள்ள யானைகள் தங்கள் குடியிருப்புகளை நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில் காடுகளைப் பாதுகாப்பதாக கூறும் வனஇலாகா, எல்லைப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதில் மும்முரமான பங்களிப்பினைச் செலுத்தி வருகின்றது. அது மட்டுமன்றி, சிங்களக் குடியேற்றத்திற்குப் பாதுகாப்பிற்காக தமிழ்ப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் வகையில் புதிய காவலரண் களையும், முகாம் களையும் அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குடும்பி மலைக்கும் முறுத்தானைக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியின் பல பகுதிகளில் சிறிய சிறிய படை முகாம்களை அமைக்கும் பணிகளை கடந்த இரண்டு வாரங்களாக படையினர் முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கொரனாவினை காரணம் காட்டி தமிழ் மக்கள் முடக்கப் பட்டுள்ளதை இலகுவாக பயன் படுத்தி திட்டமிட்ட வகையில் இந்த சிங்கள குடியேற்ற செயற்பாடுகள் முன்னெ டுக்கப் படுகின்றன.

மறு புறம் அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புன்னைக் குடாவுக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது அங்கு அமையவுள்ள தொழிற் பேட்டைக்கான இடத்தினை பார்வை யிட்டதுடன், அங்குள்ள விகாரைக்கும் சென்று விகாராதிபதி யுடனும் கலந்துரையாடி உள்ளார். அத்துடன் கல்குடா விலிருந்து புன்னக்குடா வரையில் அமைக்கப் படவுள்ள வீதி நிர்மாணப் பணி தொடர்பிலும் கலந்துரையாடி உள்ளார். இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் சென்றிருந்தார். விகாராதிபதி யுடனான சந்திப்பின் போது அப் பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்படுவதான கலந்துரையாடலும் இடம் பெற்றுள்ளது.

நான் கடந்த கட்டுரையில் சுட்டிக் காட்டியது போன்று புன்னக் குடாவில் அமையவுள்ள தொழிற் பேட்டையும் சிங்கள குடியேற்றத்திற்கான வழியென சுட்டிக் காட்டியிருந்தேன். அதன் பின்னணியின் சில வெளிப்பாடுகளே இந்த அமைச்சரின் வருகை ஆகும்.

இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக இது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. வெறுமனே தமிழ்த் தேசியத்தையும், தமிழ் மக்களையும் பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள், இது தொடர்பில் இன்னும் மௌனம் காப்பது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சூழ்ந்து நிற்கும் இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்து வதற்கு வட கிழக்கு என்று பாராது, தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும். இன்று நாங்கள் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், அது பாரிய ஆபத்தாகவும், தமிழ் தேசியத்தினைச் சிதைக்கும் நடவடிக்கை யாகவும் அமையும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சூழ்ந்து நிற்கும் ஆபத்து - மட்டு.நகரான்