டித்வா சூறாவளி தாக்கம்: இலங்கையின் மீள் கட்டுமானத்திற்கான உதவியை அறிவித்தது இந்தியா!

“ டித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட பெரும் சேதங்களை கருத்தில் கொண்டு, இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மீள் கட்டுமான உதவித் தொகுப்பை வழங்க உறுதியளித்துள்ளது” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்

ஒப்பரேஷன் சாகர் பந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்லி பாலத்தை மெய்நிகர் மூலம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இணைந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மெய்நிகர் மூலம் திறந்து வைத்துார்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை (23 ) கொழும்பில் இடம்பெற்ற இருதரப்பு ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக இலங்கை ஜனாதிபதி அநுர குமார் திசாநாயக்கவுக்கு பிரதமரின் செய்தியை கொண்டு வந்ததாகவும், இன்று காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் சூறாவளி டித்வாவால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாகவும் கூறினார்.

இந்தியப் பிரதமர் மோடியின் கடிதத்தின் மூலம், முதல் பதிலளிப்பாளராக (First Responder) இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் மீள் கட்டுமானத்துக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த உதவியை எவ்வாறு மிக விரைவாக வழங்குவது என்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

இந்தியா, “Neighbourhood First” மற்றும் “MAHASAGAR” கொள்கைகளுக்கு அமைவாக, இலங்கை நெருக்கடியை எதிர்கொண்ட ஒவ்வொரு தருணத்திலும் துணைநின்றுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியின் போதும், தற்போது சூறாவளி பேரிடரின் போதும் இந்தியா உடனடியாக உதவியதாக அவர் நினைவூட்டினார். பேரிடர் முகாமைத்துவத்தில் ஒத்துழைப்பை வலியுறுத்தும் Coalition for Disaster Resilient Infrastructure போன்ற முயற்சிகளுக்கும் இந்தியா தலைமை வகித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சூறாவளி டித்வா கரையை கடந்த அதே நாளில் “Operation Sagar Bandhu” என்ற பெயரில் இந்தியாவின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. INS Vikrant விமான தாங்கிக் கப்பல் மற்றும் INS Udayagiri கப்பல் கொழும்பில் இருந்து நிவாரணப் பொருட்களை வழங்கியதுடன், ஹெலிக்கொப்டர்கள் மூலம் உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிக்கொப்டர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக இலங்கையில் செயல்பட்டன.

மேலும், 80 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) குழு இலங்கையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், கண்டி அருகே இந்திய இராணுவம் அமைத்த கள மருத்துவமனையில் 8,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. இரண்டு BHISHM அவசர மருத்துவ அலகுகளும் இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இணைப்புகளை மீட்டெடுப்பது அவசர தேவையாக இருந்ததால், கிளிநொச்சியில் Bailey பாலம் ஒன்று C-17 விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்டதாகவும், சிலாபத்தில் மேலும் ஒரு பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதுவரை 1,100 தொன் நிவாரணப் பொருட்கள், 14.5 தொன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பில், USD 350 மில்லியன் சலுகை கடன்களாகவும், USD 100 மில்லியன் மானியங்களாகவும் வழங்கப்படவுள்ளது. இது வீதி, ரயில், பாலங்கள் மீளமைப்பு, வீடுகள் கட்டுதல், சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் எதிர்கால பேரிடர் தயார்நிலை போன்ற துறைகளை உள்ளடக்கும்.

மேலும், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதாகவும், இந்திய நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இலங்கை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

“இந்த கடினமான காலகட்டத்தில் இந்தியா இலங்கையுடன் உறுதியாக நிற்கிறது. இலங்கை மக்கள் மீண்டும் தங்கள் வலிமையையும் தாங்குத்தன்மையையும் நிரூபிப்பார்கள்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.