‘டித்வா’ சூறாவளி பேரனர்த்தம்: 21,200 கர்ப்பிணித்தாய்மார்கள் பாதிப்பு

‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர். அதுமாத்திரமன்றி இவ்வனர்த்தத்தினால் அதிக போசணை தேவைப்படும் நலிவுற்ற நிலையிலுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்த 281,830 சிறுவர்களும்  19,021 கர்ப்பணித்தாய்மாரும் 96,637 பாலூட்டும் தாய்மாரும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘டித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பேரனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அனர்த்த முகாமைத்துவ ஆசிய, பசுபிக் கூட்டிணைவு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான முகவரகம், ஆசிய அனர்த்த முகாமைத்துவ தயார்நிலை நிலையம் ஆகிய 3 அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

பாதிக்கப்பட்டோர்

அவ்வறிக்கையிலுள்ள தரவுகளின் பிரகாரம்  டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமே கடந்த இரு தசாப்த காலங்களில் இலங்கையில் பதிவான மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியாகும். இவ்வனர்த்தம் காரணமாக நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 522,000 சிறுவர்கள், 263,000 முதியோர்கள் மற்றும் 21,200 கர்ப்பிணித்தாய்மார் உள்ளடங்கலாக சுமார் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகள்

அதேபோன்று இப்பேரனர்த்தத்தினால் மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களும் வடக்கு மாகாணத்தில் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களும் மத்திய மலைநாட்டில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களும் மிகமோசமானப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

உட்கட்டமைப்பு சேதம்

அதேவேளை 16,000 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வீதிகள், 278 கிலோமீற்றருக்கு மேற்பட்ட புகையிரதப்பாதைகள் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் சேதமடைந்திருப்பதுடன், அதன்விளைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு கண்டி, கேகாலை, புத்தளம், கம்பஹா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையான வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வீடுகள் சேதமடைந்ததன் காரணமாக பெரும் எண்ணிக்கையானோர் இடம்பெயர்ந்து தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர். அங்கும் தனியுரிமை, இருபாலாருக்கும் அவசியமான வசதிகள், சிறுவர்நேய சூழல் உள்ளிட்ட பாதுகாப்புசார் கரிசனைகள் நிலவுகின்ற அதேவேளை, மீண்டும் வீடுகளுக்குத் திரும்பியவர்கள், சேதமடைந்த வீடுகளை மீளப்புனரமைக்கவேண்டிய நெருக்கடிக்கு நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

கல்வி

1339 பாடசாலைகளும், 2720 முன்பள்ளிகளும் சேதமடைந்திருப்பதன் விளைவாக நாடளாவிய ரீதியில் சுமார் 458,600 பாடசாலை மாணவர்கள் மற்றும் 68,000 முன்பள்ளி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

உணவுப்பாதுகாப்பு

பேரனர்த்தத்தினால் விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய வாழ்வாதாரத்துறைகள் சீர்குலைவடைந்திருக்கின்றன. அத்தோடு வாழ்வாதார தொழிலுக்கு அவசியமான உபகரணங்கள் சேதமடைந்தமை, தற்காலிக இடப்பெயர்வு மற்றும் சந்தை அடைவில் பாதிப்பு போன்ற காரணங்களால் 39 சதவீதமான குடும்பங்களுக்கு நாளாந்தம் போதியளவு உணவு கிடைக்கப்பெறவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கை நிலங்கள் சேதம் மற்றும் மீன்பிடித்துறை பாதிப்பு போன்ற காரணங்களால் பெருந்தொகை வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அதனை முறையாகக் கையாள்வதற்கு உடனடி உணவு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும்.

போசணை மட்டம்

அனர்த்தத்தின் விளைவாக ஐந்து வயதுக்குக் குறைந்த 281,830 சிறுவர்கள், 19,021 கர்ப்பணித்தாய்மார், 96,637 பாலூட்டும் தாய்மார் உள்ளடங்கலாக அதிக போசணை தேவைப்படும் நலிவுற்ற நிலையிலுள்ள தரப்பினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக புத்தளம், நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இளம் சிறுவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் மந்தபோசணைக்கு முகங்கொடுக்கக்கூடிய வாய்ப்பும் உயர்வாகக் காணப்படுகின்றது. எனவே ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மாரை இலக்காகக்கொண்ட போசணைசார் உதவி வழங்கல் செயற்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும்.