தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?

13 தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?

தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் என்ன என்பது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் வழங்கிய  சிறப்பு  செவ்வி…

* நீதிமன்றக் கட்டளையை மதிக்காத பெரும்பன்மை இனத்தவர்கள்; குருந்தூரில் தொடரும் பௌத்த கட்டுமானங்கள்

*400ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க நடவடிக்கை

*அபகரிப்புத்தொடர்பில் நீதிமன்றில் முறையிட ஆலோசனை

*ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்

*சைவழிபாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டதுடன் சைவழிபாடுகளுக்கும் தடை,உயர்நீதிமன்றில் எம்.ஏ.சுமந்திரன் வழக்குத்தாக்கல்

கேள்வி:- குருந்தூர் மலை சிவன் கோவில் பகுதி அபகரிப்பு தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?

ரவிகரன் scaled 1 தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?

பதில்:- கடந்த 2018.09.04அன்றைய தினம் இரண்டு பிக்குகள் உட்பட பன்னிரெண்டுபேர் புத்தர்சிலை மற்றும் கட்டுமானப் பொருட்கள் பலவற்றுடனும் குருந்தூர்மலைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைய எடுத்த முயற்சியினை நாமும், அங்குள்ள மக்களும் இணைந்து தடுத்து நிறுத்தினோம்.

அப்போது அங்கு ஒட்டுசுட்டான் காவல்துறையினர் வருகைதந்து விசாரணைகளை நடாத்தி, பின்னர் இந்த குருந்தூர் மலை விடயத்தை முதன்முதலாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே பாரப்படுத்தினர்.

அவ்வாறு  காவல்துறையினரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கினை ஆராய்ந்த நீதிபதி, இந்த குருந்தூர்மலை விடயத்திலே குழப்பங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றவகையில் பல கட்டளைகளையும் வழங்கியிருந்தார்.

அந்தவகையில் தொல்லியல் ஆய்வுகளை நடாத்தலாம், ஏற்கனவே அங்கு இடம்பெறும் சைவவழிபாடுகளைத் தடுக்கக்கூடாது, சமய வழிபாடுகளுடன் தொடர்புடைய கட்டுமானங்கள் எதனையும் அங்கு மேற்கொள்ளக்கூடாது, தொல்லியல் ஆராட்சியின்போது யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீடத்துடன் தொடர்புடையவர்கள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்ற பல கட்டளைகளை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இதன்பின்னர் குருந்தூர்மலையில் இடம்பெறும் தொல்லியல் அகழ்வாராட்சிக்கு தொல்லியல் திணைக்களம் பாதுகாப்புக் கோரியநிலையில், அங்கு பாதுகாப்புக் காவலரண் ஒன்றினை அமைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந் நிலையில் குருந்தூர்மலையில் பாதுகாப்பிற்கென இராணுவத்தினர் வந்தபின்பு,எமது சைவமக்கள் அங்கு வழிபடுகளுக்குச் செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் கொரோனா பேரிடர் காலத்தில்கூட குருந்தூர்மலையில் அத்துமீறிய பாரிய பௌத்த விழாக்கள் மேற்கொள்ளப்பட்டன.

04 resized தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?

அதுமாத்திரமின்றி அங்கு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக் கூறிக்கொண்டு, குருந்தூர்மலையிலிருந்த சைவ வழிபாட்டு அடையாளங்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. அதேவேளை பௌத்த வழிபாட்டுடன் தொடர்புடைய கட்டடங்கள் நீதிமன்றக் கட்டளைகளையும் மீறி அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டன.

இந் நிலையில் கடந்த 14.07.2022 இந்த வழக்கில் எம்மால் நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டு புதிதாக பௌத்த வழிபாட்டுடன் தொடர்புடைய கட்டடங்கள் அமைக்கப்படுவதை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினோம்.

இந்நிலையில் தொல்லியல் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையையும், அதனோடு தொடர்புடைய நிர்மாணங்களை அகற்றுமாறு பொலிசாருக்கு நீதிமன்று கட்டளையிட்டதுடன், அங்கு ஏதேனும் சிலைகள் இருந்தாலும் அவற்றையும் அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

இவ்வாறு நீதிமன்று கட்டளைகளை வழங்கியதையடுத்து, கடந்த 19.07.2022 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சார்ந்த சட்டத்தரணிகள் இந்தவழக்கில் மீண்டும் நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்து, தொல்லியல் விடயங்களை மேற்கொள்வதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என வாதிட்டனர்.

அதனைத் தொடர்ந்து நீதபதி, இருதரப்புச் சட்டத்தரணிகள் அனைவரும் குருந்தூர்மலைக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து நீதிமன்றால் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையில் திருத்தம்கொண்டுவரப்பட்டது.

தொல்லியலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காகத்தான் சில கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், அன்று அந்தக்கட்டுமானப்பணிகள் எவ்வாறிருந்ததோ அதற்குமேல் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாதெனவும் கட்டளையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தற்போதும் அங்கு பௌத்தவிகாரைக்குரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறிகின்றோம். அந்தவகையில் நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத நிலை காணப்படும்போது, நாம் யாரிடம் எமது பிரச்சினைகளைத் தெரிவிப்பது என்ற கேள்விதான் எம்மிடத்தே எழுகின்றது.

கேள்வி:- தற்போது முல்லைத்தீவு பகுதியில் வயல் நிலங்களையும் தொல்லியல் துறையினர் தமது  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றதே இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

07 தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?
பதில்:- ஆம் நிச்சயமாக, குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளிலுள்ள நிலங்களை தற்போது ஆக்கிரமிப்புச்செய்யும் முயற்சிகள்  இடம்பெற்றுவருவதாக நாம் அறிகின்றோம்.

ஏற்கனவே குருந்தூர்மலையில், மலைப்பகுதியில் காணப்படும் 58ஏக்கர் நிலங்களும், குளம் உள்ளிட்ட 20ஏக்கர்களுமாக மொத்தம் 78ஏக்கர் நிலங்கள் தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுக்குரிய பகுதி என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் தற்போது தண்ணிமுறிப்பு குமுழமுனை பிரதானவீதியிலிருந்து பழைய தண்ணிமுறிப்பு குடியிருப்புப் பகுதி, நாகஞ்சோலை ஒதுக்கக்காட்டுப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய 320ஏக்கர் காணிகளை மேலதிகமாக அளவீடுசெய்து ஒதுக்குமாறு கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்டவர்களால் கோரப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

அந்தவகையில் மொத்தமாக ஏறத்தாள 400ஏக்கர் காணிகள் அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின. இவ்வாறு அபகரிக்கப்படுகின்ற குருந்தூர் மலையை அண்டிய காணிகள் அனைத்தும் எமது தமிழ் மக்களுடைய வயல்காணிகளாகும்.

குறிப்பாக இந்தக் காணிகளிலே, பெரும்பாலான வயல்காணிகளில் கடந்த சிறுபோக நெற்பயிற்செய்கைகூட எமது தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், அண்மையிலேயே அறுவடைகளை மேற்கொண்டிருக்கின்றனர். அவ்வாறான காணிகள்கூட அபகரிக்கும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்த காணிகள் அபகரிக்கப்படுவதற்குரிய எதிர்ப்பு நடவடிக்கையாக, ஏற்கனவே குருந்தூர்மலை தொடர்பில் நீதிமன்றில் நிலுவைலுள்ள வழக்கினை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து, அங்கு தற்போது புதிதாக நில அபகரிப்புக்கள் மேற்கொள்ளப் படுகின்றன என்ற விடயத்தினை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்துவதற்கு எமது சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருகின்றோம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

19 தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?

கேள்வி:- ஏன் இவ்வாறான தொடர் நில அபகரிப்புக்கு எதிராக பெரியளவில் ஓர் கவனயீர்ப்பு போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை, இதில் தமிழ் அரசியல் தலைமைகளின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

பதில்:- இல்லை, குருந்தூர்மலை ஆக்கிரமிப்பிற்கு எதிராக எமது தமிழ் மக்கள் அவ்வப்போது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். ஒட்டுமொத்தமாக போராட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை என்று சொல்லிவிட முடியாது.

இருப்பினும் சில அச்சுறுத்தல் நிலமைகள் காரணமாக எமது மக்கள் தற்போது பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொள்ளத் தயங்குகின்றனர்.

குறிப்பாக இங்கு புலனாய்வாளர்கள் விதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றே சொல்ல  வேண்டும்.  இவ்வாறு இங்கு விதைக்கப்பட்டிருக்கின்ற புலனாய்வாளர்கள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுகின்ற எமது மக்களை அச்சுறுத்துகின்றனர்.

போராட்டங்களில் ஈடுபடுகின்ற எமது மக்களை வீடுவீடாகச்சென்று புலனாய்வாளர்கள் மிரட்டுகின்ற செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, குருந்தூர்மலையில்’கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சி பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோரால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

அவர்களது இந்தமுயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் பிரதிநிநிகளாக நாமும், மக்களும் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அதன்பயனாக அன்றைய முயற்சிகள் அவர்களால் கைவிடப்பட்டிருந்தன.

இந் நிலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடயூறு விளைவிப்பதாக அன்றைய போரட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக முல்லைத்தீவு காவல் நிலையத்தில் சில பிக்குகள் முறைப்பாடு மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி போராட்டத்தில் கலந்துகொண்ட எம்மை அழைத்த காவல்துறையினர் எம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இந்தவிடயத்தினை நீதிமன்றில் பாரப்படுத்துவதற்காக எம்மிடம் கையெழுத்துக்களும் பெறப்பட்டன.

இவ்வாறான சூழலில் மக்கள் பிரதிநிதிகளான எமக்கே இவ்வாறான ஒருவித அச்சுறுத்தல் நிலமை இருக்கும்போது, தாம் எவ்வாறு போராட்டங்களை மேற்கொள்வது என்ற நிலையில் மக்கள் இருக்கின்றார்கள்.

23 தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?

எனவே இவ்வாறான அச்சுறுத்தல் நிலமைகள் காரணமாக தற்போது மக்கள் பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்குத் தயங்குகின்றார்கள்.

அதேவேளை குருந்தூர்மலை விடயத்திலே தமிழ் அரசியல் தலைவர்களின் பங்களிப்புக்கள் நிறையவே காணப்படுகின்றன.

அந்தவகையில் குருந்தூர்மலையில் சைவவழிபாடுகள் தடுக்கப்படுவது தொடர்பிலும், சைவவழிபாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டது தொடர்பிலும் உயர் நீதிமன்றிலே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர தமிழ் தலைவர்கள் பலரும் அவ்வப்போது குருந்தூர்மலைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிடுவது மற்றும், மக்களோடு இணைந்து போராடுவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறாக எமது பூர்வீகம் பாதுகாக்கப்படவேண்டும், காப்பாற்றப்படவேண்டுமென்ற உணர்வுடன் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தவிடயத்தில் தமது பங்களிப்புக்களைச் செய்துவருகின்றனர்.