கொரோனா பயணக் கட்டுப்பாடுகள்: வெளிநாட்டிற்கு இறப்பு நிகழ்வுக்கு செல்ல இரக்கம் காட்ட மறுக்கும் குடிவரவுத்துறை 

கொரோனா பயணக் கட்டுப்பாடுகள்

கொரோனா பயணக் கட்டுப்பாடுகள்: கடந்த புத்தாண்டு தினத்தன்று மாலை லண்டனில் உள்ள ஆஷ் ஃபேடியனின் மைத்துனர் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து, அவரது இறப்பு நிகழ்வுக்கு செல்ல அவுஸ்திரேலியாவில் இணைப்பு விசாவில் உள்ள ஃபேடியன் திட்டமிட்ட போது, லண்டனுக்கு சென்றால் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாது என்ற பயணக் கட்டுப்பாட்டினை அறிந்திருக்கிறார். 

பின்னர், இந்த பயணக் கட்டுப்பாட்டிலிருந்து கருணை அடிப்படையில் விலக்குக் கோரி விண்ணப்பித்த போது அவருக்கு விலக்கு அளிக்க அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை மறுத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் ஆறுமுறை அவர் விண்ணப்பித்திருக்கிறார். மைத்துனரின் இறப்புச் சான்றிதழ், இறப்பு நிகழ்வின் நோட்டீஸ், தடுப்பூசி சான்றிதழ் என எதைக்காட்டியும் ஃபேடியனுக்கு விலக்களிக்கப்படவில்லை.

“இது இரக்கம் காட்டப்பட வேண்டிய வழக்கு இல்லை என்றால், உண்மையில் வேறு எதனை இரக்க அடிப்படையில் பார்ப்பார்கள் என எனக்கு தெரியவில்லை,” ஃபேடியன் கூறியிருக்கிறார். கொரோனா பெருந்தொற்று சூழலின் உச்சக்கட்டத்தின் போது, ஃபேடியன் போன்று பல தற்காலிக விசாவாசிகள் பிரச்சனைகளை சந்தித்து இருக்கின்றனர். ஆனால், அதன்பிறகு பெரும்பாலான தற்காலிக விசாவாசிகள் விலக்கின்றி அவுஸ்திரேலியாவுக்கு உள்ளே செல்லவும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதே சமயம், ஃபேடியன் போன்று Bridging Visa B எனும் இணைப்பு விசாக்களில் உள்ளவர்கள் தொடர்ந்து கொரோனா பயணக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வழக்கமாக, இந்த விசா கொண்டிருப்பவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு உள்ளே செல்லவோ வெளியே செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் இந்த இணைப்பு விசா பிரிவினரை கட்டுப்படுத்தி உள்ளமை பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த சூழலில், இணைப்பு விசாவாசிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட இணைய மனுவில் 15 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு இருக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினர் Zali Steggall மற்றும் செனட் உறுப்பினர் Nick McKim ஆகியோரும் விசாவாசிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இணைப்பு விசாவாசிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இக்கட்டுப்பாடுகள் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் அளவிட முடியாத வலியை  எதிர்கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக்குக்கு எழுதிய கடிதத்தில் செனட் உறுப்பினர் Nick McKim குறிப்பிட்டிருக்கிறார்.

Tamil News